டென்னிஸ்: தரவரிசையில் ஜோக்கோவிச் மீண்டும் முதலிடம்

1 mins read
002a88d1-db8b-490c-b399-7d0ed45ccd03
7-6, 6-7,6-3 என்ற புள்ளிக்கணக்கில் ரூனை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார் ஜோக்கோவிச்.  - படம்: ஏஎஃப்பி

ரோம்: ஆண்கள் டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார் நட்சத்திர வீரர் நோவாக் ஜோக்கோவிச்.

இதன் மூலம் ஆண்டின் நிறைவில் எட்டாவது முறையாக முதலிடத்தை தக்கவைத்துக் கொண்ட சாதனையையும் ஜோக்கோவிச் படைத்துள்ளார்.

ஜோக்கோவிச் இத்தாலியில் நடைபெற்ற ‘எடிபி’ டென்னிஸ் போட்டியில் கலந்துகொண்டார். ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்த ஆட்டத்தில் அவர் டென்மார்க்கின் ஓல்கர் ரூனை எதிர்த்து விளையாடினார்.

முதல் செட்டை 7-6 என்று இழந்த போதிலும் ஜோக்கோவிச் தமது அனுபவமிக்க ஆட்டத்தை வெளிப்படுத்தி, அடுத்த இரண்டு செட்டுகளை வென்று ஆட்டத்தை தன்வசப்படுத்தினார். கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் நடந்த இந்த ஆட்டத்தில் 7-6, 6-7,6-3 என்ற புள்ளிக்கணக்கில் ரூனை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார் ஜோக்கோவிச்.

36 வயதான ஜோக்கோவிச் இதுவரை 24 முறை பொதுவிருதுப் பட்டங்களை வென்று அசத்தியுள்ளார். இந்த ஆண்டு மட்டும் மூன்று பொது விருதுகளை வென்றுள்ள ஜோக்கோவிச், விம்பிள்டன் பொதுவிருதின் இறுதியாட்டத்தில் தோல்வியடைந்தார்.

தற்போதுள்ள இளையர்கள் தமக்கு கடுமையாகப் போட்டி கொடுப்பதால், எல்லா ஆட்டங்களிலும் முழு பலத்தையும் காட்ட வேண்டியுள்ளது என்று ஜோக்கோவிச் கூறினார்.

குறிப்புச் சொற்கள்