துபாயில் புதிய தலைமையகம் திறந்த பிரபல காற்பந்துக் குழு

1 mins read
7f525ec0-edee-44bc-a985-93b184bac710
ஏசி மிலான் காற்பந்துக் குழுவின் சின்னம். - படம்: ராய்ட்டர்ஸ்

மிலான்: இத்தாலியக் காற்பந்து லீக்கில் இடம்பெற்றுள்ள பிரபல குழுவான ஏசி மிலான், துபாயில் தலைமையகத்தைத் திறந்துள்ளது.

மத்திய கிழக்கில் வணிக ரீதியிலான வாய்ப்புகளைக் கைப்பற்றவும் அங்கு முக்கியப் பங்காளிகளுடன் உறவை மறுஉறுதிப்படுத்தவும் துபாயில் தலைமையகத்தைத் திறக்க முடிவெடுக்கப்பட்டதாக ஏசி மிலான் திங்கட்கிழமை தெரிவித்தது.

அனைத்துலகக் காற்பந்துக்கு வளைகுடா பகுதி முன்பைவிட முக்கியமானதாகத் திகழ்கிறது. ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் (யுஏஇ), கத்தார் போன்ற எண்ணெய் வளம் கொண்ட நாடுகள் பிரான்சின் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன், பிரிட்டனின் மான்செஸ்டர் சிட்டி போன்ற பிரசித்திபெற்ற காற்பந்துக் குழுக்களை வாங்கியுள்ளன.

போர்ச்சுகலின் நட்சத்திர ஆட்டக்காரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ போன்ற வீரர்கள் சவூதி அரேபியாவில் விளையாடி வருகின்றனர். கடந்த ஆண்டு உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியை கத்தார் ஏற்று நடத்தியது.

ஐக்கிய அரபுச் சிற்றரசுகளில் புதிய தலைமையகம் அமைப்பது குறித்த திட்டங்களை ஏசி மிலான் கடந்த ஆண்டு அறிவித்திருந்தது. மத்திய கிழக்கில் தனக்கு 2.5 மில்லியன் ரசிகர்கள் இருப்பதாக அது கூறியது.

ஏசி மிலானின் பங்காளித்துவ நிறுவனமும் துபாயின் பிரதான விமான நிறுவனமான எமிரேட்ஸ், ஐக்கிய அரபுச் சிற்றரசுகளில்தான் தளம் கொண்டுள்ளது. 2007லிருந்து ஏசி மிலானுக்கு ஆதரவாளராக எமிரேட்ஸ் இருந்து வந்துள்ளது.

‘ரெட்பர்ட் கேப்பிட்டல் பார்ட்னர்ஸ்’ எனும் அமெரிக்க முதலீட்டு நிறுவனத்தின் தலைமைத்துவத்தின்கீழ், ஏசி மிலானின் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்குக் கொண்டுசெல்லும் விதமாக இப்புதிய தலைமையகம் அமைகிறது.

குறிப்புச் சொற்கள்