பெங்களூரு: இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளர் ராகுல் டிராவிட், பந்தடிப்பாளர் ஷ்ரேயாஸ் ஐயரை அணியின் நடுவரிசையின் முதுகெலும்பு என்று புகழ்ந்து தள்ளியுள்ளார்.
நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 128 ஓட்டங்கள் விளாசிய ஷ்ரேயாஸ் ஐயர், இலங்கையுடனான போட்டியில் 82 ஓட்டங்களும் தென்னாப்பிரிக்காவுடனான போட்டியில் 77 ஓட்டங்களும் எடுத்து அசத்தினார்.
“கடந்த 10 ஆண்டுகளாக நான்காவது இடத்தில் ஆடும் சிறந்த பந்தடிப்பாளரை இந்தியா தேடி வந்தது. மிகவும் முக்கியமான அந்த இடம், ஆட்டத்தின் போக்கையே மாற்றக்கூடியது. தற்போது ஷ்ரேயாஸ் ஐயர் அந்த இடத்திற்கு ஏற்றவராக மாறியுள்ளார்,” என்று டிராவிட் கூறினார்.
இந்த உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இந்தியா தான் விளையாடிய ஒன்பது ஆட்டங்களிலும் வெற்றிபெற்றுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை பெங்களூரில் நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடிய இந்திய அணி 50 ஓவர்களில் 410 ஓட்டங்கள் குவித்தது.
ரோகித் சர்மா (61), ஷுப்மன் கில் (51), விராத் கோஹ்லி (51), ஷ்ரேயாஸ் ஐயர் (128), கே எல் ராகுல் (102) என களமிறங்கிய முதல் ஐந்து பந்தடிப்பாளர்களும் 50 ஓட்டங்களுக்குமேல் குவித்து சாதனை படைத்தனர்.
இலக்கை விரட்டிய நெதர்லாந்தால் 250 ஓட்டங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இறுதியில் இந்தியா 160 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.