புதுடெல்லி: உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியுடன் ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் நவீன் உல்-ஹக் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் நடைபெறும் உலகக் கிண்ணப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி நான்கு வெற்றிகள், 5 தோல்வியுடன் அரையிறுதி வாய்ப்பை இழந்து போட்டியிலிருந்து வெளியேறியுள்ளது. இந்தப் போட்டியில் முன்னாள் உலக வெற்றியாளர்களான இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை ஆகிய அணிகளை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் வரலாறு படைத்தது.
இந்நிலையில், அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் நவீன் உல்-ஹக் அனைத்துலக ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்த உலகக் கிண்ணப் போட்டியில் அவர் 8 விக்கெட்களைச் சாய்த்திருந்தார்.
அதேநேரத்தில் 20 ஓவர் போட்டிகளில் ஆப்கானிஸ்தான் அணிக்காக தொடர்ந்து விளையாடுவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
24 வயது நவீன் உல்-ஹக் ஆப்கானிஸ்தான் அணிக்காக 15 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 22 விக்கெட்டுகளையும் 27 அனைத்துலக டி20 போட்டிகளில் விளையாடி 34 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.

