கொழும்பு: இலங்கை கிரிக்கெட் வாரியத்தை நடத்துவது ஜெய் ஷா என்று இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தியாவில் நடைபெற்று வரும் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி மிக மோசமாகச் செயல்பட்டு வெளியேறியது. களமிறங்கிய 9 போட்டிகளில் 2 போட்டிகளில் மட்டுமே அது வெற்றி பெற்றது. இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 55 ஓட்டங்களில் சுருண்ட இலங்கை, 302 ஓட்டங்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்தத் தோல்விக்குப் பிறகு இலங்கை கிரிக்கெட் வாரியத்தில் பிரச்சினைகள் வெடித்துள்ளன.
சில நாள்களுக்கு முன்பு இலங்கை கிரிக்கெட் வாரியத்தை கலைத்துவிட்டதாக அந்நாட்டு அரசு அறிவித்தது. அணியின் நிர்வாகப் பணிகளைக் கவனிக்க இலங்கைக்கு உலகக் கிண்ணத்தை வென்று கொடுத்த முன்னாள் அணித் தலைவர் அர்ஜுன ரணதுங்க தலைமையில் ஏழு பேர் அடங்கிய இடைக்காலக் குழு ஒன்றையும் இலங்கை அரசு நியமித்தது. இந்த அறிவிப்பை அந்த நாட்டின் விளையாட்டுத் துறை முறைப்படி வெளியிட்டது.
இந்தச் சூழலில் இலங்கை அணியை இடைநீக்கம் செய்துள்ளது அனைத்துலக கிரிக்கெட் மன்றம் (ஐசிசி).
“ஐசிசியின் முழுநேர உறுப்பினரான இலங்கை கிரிக்கெட் வாரியம் விதிகளை மீறி இயங்குவதாகத் தெரிகிறது. அதனால் இலங்கை கிரிக்கெட் வாரியத்தை இடைநீக்கம் செய்துள்ளோம். இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் விவகாரங்கள் தன்னாட்சி முறையில் நிர்வகிக்கப்பட வேண்டும். மேலும், அரசாங்கத்தின் தலையீடு இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டிய தேவை உள்ளது,” என ஐசிசி தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் அடங்குவதற்குள்ளாகவே தற்போது புதிய பரபரப்பை கிளப்பி இருக்கிறார் அர்ஜுன ரணதுங்க. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளரான ஜெய் ஷா தொடர்பாக அவர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
“இலங்கை கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் மற்றும் ஜெய் ஷா இடையிலான தொடர்பு காரணமாக, இலங்கை கிரிக்கெட் வாரியத்தை நசுக்கி, தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்ற எண்ணத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) உள்ளது.
“ஜெய் ஷாவே இலங்கை கிரிக்கெட்டை நடத்தி வருகிறார். ஜெய் ஷாவின் அழுத்தம் காரணமாகவே இலங்கை கிரிக்கெட் அழிந்து வருகிறது. இந்தியாவில் உள்ள ஒருவர் இலங்கை கிரிக்கெட்டை சீரழிக்கிறார். அவரின் தந்தை அமித் ஷா இந்தியாவின் இந்திய உள்துறை அமைச்சராக இருப்பதால், ஜெய் ஷா சக்தி வாய்ந்த நபராக உள்ளார்” என்று அர்ஜுன ரணதுங்க குற்றம் சுமத்தியுள்ளார்.