ஆஸ்திரேலியா-தென்னாப்பிரிக்கா மோதல்

2 mins read
ed235f70-a36f-4401-bc7b-ead963015c48
ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 201 ஓட்டங்கள் எடுத்து கொண்டாடிய ஆஸ்திரேலிய வீரர் கிளென் மேக்ஸ்வெல். - படம்: ஏஎஃப்பி
multi-img1 of 2

கோல்கத்தா: உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும் தென்னாப்பிரிக்காவும் மோதுகின்றன. இந்த ஆட்டம் வியாழக்கிழமையன்று (நவம்பர் 16) நடைபெறுகிறது.

இதற்கு முன்பு நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் அரையிறுதிச் சுற்றுக்கு தென்னாப்பிரிக்கா நான்கு முறை (1992, 1999, 2007, 2015) தகுதி பெற்றது.

ஆனால் அவற்றில் ஒருமுறைகூட அது வெற்றி பெற்றவில்லை.

அரையிறுதி ஆட்டத்தில் அது ஆஸ்திரேலியாவிடம் இரண்டு முறை தோல்வியைத் தழுவியது.

1999, 2007ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற அரையிறுதி ஆட்டங்களில் ஆஸ்திரேலியாவிடம் தென்னாப்பிரிக்கா தோற்றது.

2007ஆம் ஆண்டு அரையிறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வெறும் 149 ஓட்டங்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது தென்னாப்பிரிக்கா.

ஆனால் இம்முறை அரையிறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்று இறுதி ஆட்டத்துக்குத் தகுதி பெறும் முனைப்புடன் தென்னாப்பிரிக்க வீரர்கள் உள்ளனர்.

ஒன்பது லீக் ஆட்டங்களில் ஏழு ஆட்டங்களில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தென்னாப்பிரிக்கா தகுதி பெற்றது.

அதுமட்டுமல்லாது, இந்த உலக கிண்ணப் போட்டியில் பந்தடிப்பில் அந்த அணி சிறப்பாகச் செயல்பட்டுள்ளது.

இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் 428 ஓட்டங்களைக் குவித்தது.

இதுவே உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி ஆட்டத்தில் பதிவு செய்யப்பட்ட ஆக அதிகமான ஓட்ட எண்ணிக்கை.

நான்கு வாரங்களுக்கு முன்பு லக்னோவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 134 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றது.

இந்நிலையில், ஐந்து முறை உலகக் கிண்ணத்தை ஏந்தியுள்ள ஆஸ்திரேலியா, இந்த உலகக் கிண்ணப் போட்டியில் தொடர்ச்சியாக ஏழு ஆட்டங்களில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 91 ஓட்டங்கள் எடுத்து ஏழு விக்கெட்டுகள் இழந்த நிலையில் கிளென் மேக்ஸ்வெல் எடுத்த 201 ஓட்டங்கள் ஆஸ்திரேலியாவுக்கு வெற்றியைத் தேடித் தந்தது.

இறுதி ஆட்டத்துக்குத் தகுதி பெறுவதில் இரு அணிகளும் ஆவலுடன் இருப்பதால் இந்த அரையிறுதி ஆட்டம் விறுவிறுப்பானதாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை என்கின்றனர் கிரிக்கெட் ரசிகர்கள்.

குறிப்புச் சொற்கள்