தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வில்லியம்சன்: கோஹ்லி தொடர்ந்து மேம்பட்டு வருகிறார்

2 mins read
d64ca2e4-95e0-4755-97a7-93a3aa85737a
சாதனை படைத்த விராத் கோஹ்லி. - படம்: ஏஎஃப்பி
multi-img1 of 2

புதுடெல்லி: நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ண அரையிறுதியாட்டத்தில் இந்தியாவின் நட்சத்திரப் பந்தடிப்பாளர் விராத் கோஹ்லி சதமடித்தார்.

அது, ஒருநாள் கிரிக்கெட்டில் கோஹ்லி அடித்த 50வது சதம். அதனைத் தொடர்ந்து ஒருநாள் கிரிக்கெட்டில் ஆக அதிக முறை சதமடித்த வீரர் என்ற பெருமையைப் பெற்றார் அவர்.

முன்னாள் இந்திய நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர் அந்த சாதனையைப் படைத்திருந்தார். சச்சின் 49 முறை சதமடித்திருந்தார்.

இவ்வாண்டின் உலகக் கிண்ணப் போட்டியில் அதை சமன் செய்த கோஹ்லி இப்போது அந்த சாதனையை முறியடித்துள்ளார்.

அதையடுத்து கோஹ்லியைப் பாராட்டினார் நியூசிலாந்து அணித் தலைவர் கேன் வில்லியம்சன். கோஹ்லி உலகின் ஆகச் சிறந்த பந்தடிப்பாளர் என்று கூறிய வில்லியம்சன், அவர் தொடர்ந்து மேம்பட்டு வருகிறார் என்று சொல்லி எதிர் அணிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கரும் கோஹ்லிக்குத் தனது பாராட்டைத் தெரிவித்துக்கொண்டார்.

“அவருக்கும் அவரது குடும்பத்துக்கும் மட்டுமின்றி இந்திய கிரிக்கெட்டை நேசிப்போருக்கும் இதை வார்த்தைகளில் விளக்குவது எளிதல்ல. சாதனை படைத்து உச்சவரம்பை உயர்த்துவோர் என்றும் இருப்பர். அதற்குப் பிறகு வேறொருவர் சாதனையை முறியடிக்கவேண்டும் என்று பலர் விரும்புவர். அதைத்தான் தனது விளையாட்டின் மூலம் செய்துள்ளார் கோஹ்லி. குறிப்பாக இந்த உலகக் கிண்ணப் போட்டியில் மனித சக்திக்கு அப்பாற்பட்ட ஒருவராக அவர் திகழ்கிறார். இப்போட்டியில் கிட்டத்தட்ட 700 ஓட்டங்களைக் குவித்திருக்கிறார். இருமுறை சதமடித்துள்ளார். அவற்றோடு சுமார் ஆறு இன்னிங்சில் பலமுறை 50 ஓட்டங்களை எடுத்திருக்கிறார்,” என்று ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஒளிவழியிடம் கூறினார் கவாஸ்கர்.

இந்திய அணியின் முன்னாள் பயிற்றுவிப்பாளர் ரவி சாஸ்திரியும் கோஹ்லியைப் பாராட்டினார்.

“இந்தப் பெருமையைப் பெறுவதற்கான தகுதி அவருக்கு உள்ளது. அவரின் நிபுணத்துவ அணுகுமுறை, தொழில் தர்மம், துல்லியமான தகவல்களுக்கு அவர் தரும் கவனம், தன்னைத் தயார்படுத்திக்கொள்ளும் விதம் ஆகியவை அதற்குக் காரணங்கள். ஒரு ஓட்டம்கூட எடுக்கமுடியாத காலத்தை அவர் எதிர்கொண்டார். மூன்று ஆண்டுகளுக்கு சதமடிக்காமல் இருந்தார். அவர் மனவுறுதியுடன் இருந்தார், தொடர்ந்து உழைத்தார். அவரின் கடின உழைப்புக்கு இப்போது வெகுமானம் கிடைத்துள்ளது,” என்றார் ‌சாஸ்திரி.

குறிப்புச் சொற்கள்