தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உலக சாதனை படைத்த ‌ஷமி

2 mins read
eea750dc-f268-4ed1-ab68-7cfee4f09fea
உலகக் கிண்ண வரலாற்றில் ஆக வேகமாக 50 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரராகத் திகழ்கிறார் இந்தியாவின் முகம்மது ‌ஷமி. - படம்: ராய்ட்டர்ஸ்

மும்பை: கிரிக்கெட் உலகக் கிண்ண வரலாற்றில் ஆக வேகமாக 50 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் இந்தியாவின் நட்சத்திரப் பந்துவீச்சாளர் முகம்மது ‌ஷமி.

இந்தியாவும் நியூசிலாந்தும் மோதிய இவ்வாண்டின் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டியின் அரையிறுதியாட்டத்தில் 57 ஓட்டங்களில் ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தினார் ஷமி. அதனைத் தொடர்ந்து வெறும் 17 ஆட்டங்களில் 50 விக்கெட்டுகளை வீழ்த்திய பெருமை அவரைச் சென்றடைந்தது.

ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க்கின் சாதனையை ‌ஷாமி முறியடித்தார். 52 ஆட்டங்களில் 50 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார் ஸ்டார்க்.

புதன்கிழமை நடைபெற்ற அரையிறுதியாட்டத்தில் முதலில் பந்தடித்த இந்தியா நான்கு விக்கெட்டுகள் இழப்பிற்கு 397 ஓட்டங்களை எடுத்தது. நியூசிலாந்தின் வெற்றி இலக்கு 398 ஓட்டங்களாக இருந்தது.

நியூசிலாந்தின் இரண்டு விக்கெட்டுகள் வெளியேற்றப்பட்ட பிறகு ஒரு கட்டத்தில் இந்தியா சற்று தடுமாறியது. ஆனால் பந்துவீச ‌ஷமி களமிறங்கிய பிறகு இந்தியா மீண்டும் ஏறுமுகமாக இருந்தது.

70 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்று இறுதியாட்டத்துக்கு முன்னேறியது.

இவ்வாண்டின் உலகக் கிண்ணப் போட்டியில் இந்தியா விளையாடிய முதல் நான்கு ஆட்டங்களில் ‌ஷமி விளையாடவில்லை. ஆனால் அதற்குப் பிறகு அவர் அதிரடியாகக் களமிறங்கினார்.

போட்டியின் முதல் சுற்றில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ‌ஷமி 54 ஓட்டங்களில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். இங்கிலாந்து, இலங்கை, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளுக்கு எதிரான ஆட்டங்களில் மொத்தம் 11 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதன் பின்னர் நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் அவர் எந்த விக்கெட்டையும் எடுக்கவில்லை. அந்த ‘சிறு ஓய்வு’க்குப் பிறகு அரையிறுதியாட்டத்தில் ‌ஷமியின் அசுர வேட்டை தொடர்ந்தது.

குறிப்புச் சொற்கள்