கிண்ணத்தை வெல்லும் வேட்கையில் இந்தியா, ஆஸ்திரேலியா

கிண்ணத்தை வெல்லும் வேட்கையில் இந்தியா, ஆஸ்திரேலியா

2 mins read
2c70589f-3611-4a61-8a63-41d10e04f3e2
இந்தியா வெற்றிபெற கிரிக்கெட் ரசிகர்கள் நடத்திய யாகம். - படம்: ராய்ட்டர்ஸ்

அகமதாபாத்: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான உலகக் கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டி குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 19) நடைபெற உள்ளது.

நடப்பு உலகக் கிண்ணத் தொடரில் இந்தியா பங்கேற்ற எந்த ஆட்டத்திலும் தோல்வியடையாமல் தொடர்ந்து வெற்றியை மட்டுமே பெற்றுள்ளது.

மறுபுறம் 8வது முறையாக உலகக் கிண்ண இறுதிப்போட்டியில் பங்கேற்கிறது ஆஸ்திரேலிய அணி.

1983 மற்றும் 2011 என இருமுறை உலகக் கிண்ணம் வென்ற இந்திய அணி, மூன்றாவது முறையாக வெல்லும் முனைப்பில் உள்ளது.

அதேபோல, ஆறாவது முறையாகக் கிண்ணம் வெல்லும் வேட்கையில் ஆஸ்திரேலியா இருக்கிறது.

இந்த இரு அணிகளுக்கும் இடையில் மிகக் கடுமையான போட்டி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அகமதாபாத் அரங்கில் கிண்ணத்துடன் இந்திய அணித்தலைவர் ரோகித் சர்மா, ஆஸ்திரேலிய அணித்தலைவர் பேட் கம்மின்ஸ்.
அகமதாபாத் அரங்கில் கிண்ணத்துடன் இந்திய அணித்தலைவர் ரோகித் சர்மா, ஆஸ்திரேலிய அணித்தலைவர் பேட் கம்மின்ஸ். - படம்: ஐஏஎன்எஸ்

இதனைக் காண்பதற்காக கிரிக்கெட் ரசிகர்கள் ரூ.20,000 முதல் ரூ.40,000 வரை செலவழித்து விமானத்தில் வருவதைத் தவிர்ப்பதற்காக சிறப்பு ரயில்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

சனிக்கிழமை மாலை டெல்லியில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் ஞாயிறு காலை அகமதாபாத் வந்து சேரும். இறுதிப்போட்டி முடிந்தபின்பு திங்கட்கிழமை அதிகாலை 2.30 மணிக்கு அகமதாபாத்தில் இருந்து புறப்பட்டு டெல்லிக்குத் திரும்பிச் செல்லும்.

உலகக் கிண்ண இறுதி ஆட்டத்தை, பிரதமா் நரேந்திர மோடியும் ஆஸ்திரேலிய துணைப் பிரதமா் ரிச்சா்ட் மாா்ல்ஸும் நேரில் காண உள்ளனர்.

இதையொட்டி மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த உயா்நிலை ஆய்வுக் கூட்டம் மாநில முதல்வா் பூபேந்திர படேல் தலைமையில் காந்திநகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இறுதி ஆட்டம் நடைபெறும் நரேந்திர மோடி மைதானம் மற்றும் கிரிக்கெட் வீரா்கள், ஆட்டத்தைக் காண வரும் முக்கியத் தலைவா்களுக்குப் பாதுகாப்பு அளிக்க 4,500 காவலா்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக முதல்வரிடம் அதிகாரிகள் தெரிவித்தனா்.

குறிப்புச் சொற்கள்