அகமதாபாத்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இம்முறை உலகக் கிண்ணத்தை வெல்ல முக்கியக் காரணமாக இருந்தவர் தொடக்கப் பந்தடிப்பாளர் டிராவிஸ் ஹெட்.
காயம் காரணமாக முதல் சில போட்டிகளில் விளையாடாத ஹெட், நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் அதிரடியாக விளையாடி சதம் விளாசினார். அரையிறுதியில் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
இறுதிப் போட்டியில் ஹெட் 120 பந்துகளில் 137 ஓட்டங்கள் குவித்தார். 47 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து நெருக்கடியில் இருந்த ஆஸ்திரேலிய அணியை தனது நிலைத்த ஆட்டத்தால் வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார் ஹெட்.
அதேபோல் களக்காப்பிலும் ஹெட் அசத்தினார். இந்திய அணித்தலைவர் ரோகித் சர்மா அடித்த பந்தை அருமையாகப் பிடித்து அவர் ஆட்டமிழக்கச் செய்தது, ஆட்டத்தின் போக்கையே மாற்றியது.
“இப்போதைக்கு உலகில் அதிர்ஷ்டம் இல்லாதவர்களில் முதலாமவர் ரோகித் சர்மாதான்!” என்று ஆட்டம் முடிந்த பிறகு சொன்னார் ஹெட்.
“கடைசி ஓட்டத்தை ஆஸ்திரேலியா எட்டியபோது என் கண்களில் கண்ணீர் வந்தது. இதை நான் ஒருபோதும் எதிர்பார்த்ததில்லை. சிறப்பாக விளையாடி உலகக் கிண்ணத்தை வென்றது மகிழ்ச்சி தருகிறது. குறிப்பாக முதல் 20 பந்துகளை எதிர்கொண்டது நல்ல மனநிலையைத் தந்தது. எனது களக்காப்பை மேம்படுத்துவதற்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டேன்,” என்று ஹெட் கூறினார்.

