எதிர்பார்ப்புகளை முறியடித்த ‘அண்டர்டாக்ஸ்’ கிரிக்கெட் அணி

எதிர்பார்ப்புகளை முறியடித்த ‘அண்டர்டாக்ஸ்’ கிரிக்கெட் அணி

2 mins read
4c77615e-ce07-4966-a476-9c28e7f9fbe2
ஒரே ஓட்ட வித்தியாசத்தில் வென்று வெற்றிக் கிண்ணத்தை ஏந்திய ‘அண்டர்டாக்ஸ்’ அணி. - படம்: புரூவிங் கிரிக்கெட்

‘சிலோன் ஸ்போர்ட்ஸ் கிளப் (சிஎஸ்சி)’ ஏற்பாடு செய்த தீபாவளி கிரிக்கெட் போட்டிகள், 12 அணிகள், 120க்கும் மேற்பட்ட வீரர்களுடன் நவம்பர் 18, 19ஆம் தேதிகளில் நடைபெற்றன.

போட்டிகளின் இறுதிச்சுற்று, உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டி நாளன்று நடந்தது ஒரு தனிச்சிறப்பு.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் குறைந்த அணிகள் பங்குபெற்றாலும் விறுவிறுப்பு சற்றும் குறையவில்லை.

அணிக்கு எட்டு வீரர்கள், ஏழு ஓவர்களுடன் நடைபெற்ற ஆட்டங்களின் இறுதிச்சுற்றில் ஒரே ஓட்ட வித்தியாசத்தில் ‘அண்டர்டாக்ஸ்’ அணி, செங்காங் கிரிக்கெட் அணியை வீழ்த்தியது.

இறுதி ஆட்டத்தில் சிறந்த விளையாட்டாளர் விருதைப் பெற்ற ‘அண்டர்டாக்ஸ்’ அணியின் சதீஷ்.
இறுதி ஆட்டத்தில் சிறந்த விளையாட்டாளர் விருதைப் பெற்ற ‘அண்டர்டாக்ஸ்’ அணியின் சதீஷ். - படம்: புரூவிங் கிரிக்கெட்

சிறந்த விளையாட்டாளர் விருது, ‘புரூவிங் கிரிக்கெட்’டின் ஆதரவில் ‘அண்டர்டாக்ஸ்’ அணியின் சதீஷுக்கு வழங்கப்பட்டது.

“2011ல் ‘முத்துஸ் கறி’க்கு அருகில் திறந்தவெளியில் டென்னிஸ் பந்து கிரிக்கெட்டுடன் தொடங்கிய நாங்கள் இன்று இந்நிலைக்கு முன்னேறியுள்ளதில் மிகவும் பெருமைப்படுகிறோம்,” என்றார் ‘அண்டர்டாக்ஸ்’ அணியின் மேலாளரும் முன்னாள் தலைவருமான ராஜீவ் பாலாஜி, 39.

14 ஆண்டுகளுக்கு மேலாக இருந்துவந்துள்ள ‘அண்டர்டாக்ஸ்’ அணியில் 40 விழுக்காட்டினர் வெளிநாட்டு ஊழியர்களாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இதற்கு முன்பு, 2021-2022ல் புக்கிட் தீமா கிரிக்கெட் அரங்கின் 20 ஓவர், 30 ஓவர் போட்டிகளிலும் வெற்றிபெற்றது ‘அண்டர்டாக்ஸ்’. குறிப்பாக, அம்முறை 20 ஓவர் போட்டிகளில் எந்த ஆட்டத்திலும் அது தோல்வி அடையவில்லை.

“இப்போட்டிகள்மூலம் வளரும் விளையாட்டாளர்கள் கனவிலும் நினைக்காத வகையில் முன்னணி விளையாட்டாளர்களுடன் விளையாடும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர்,” என்றும் ஏற்பாட்டுக் குழுவைப் பாராட்டினார் ராஜீவ்.

போட்டி முடிந்ததும், பங்குபெற்ற அணிகளிலிருந்து பலரும் தொடர்ந்து ‘சிஎஸ்சி’யிலேயே ஒளிபரப்பான உலகக் கிண்ணத்தின் இறுதிப் போட்டியைக் கண்டனர்.

“இப்போட்டிகளில் வீரர்கள் பெரும்பற்றுடன் விளையாடினர். அதன்பின், அனைவரும் ஒன்றாக இந்தியா-ஆஸ்திரேலியா ஆட்டத்தைக் கண்டதும் ஓர் அரிய அனுபவம்,” என்றார் ‘புரூவிங் கிரிக்கெட்’டைச் சார்ந்த ஹேமு.

தங்கள் போட்டிகள் முடிவடைந்ததும் உலகக் கிண்ண இறுதிச் சுற்றைக் காண விளையாட்டாளர்களும் ஏற்பாட்டாளர்களும் ஒன்று திரண்டனர்.
தங்கள் போட்டிகள் முடிவடைந்ததும் உலகக் கிண்ண இறுதிச் சுற்றைக் காண விளையாட்டாளர்களும் ஏற்பாட்டாளர்களும் ஒன்று திரண்டனர். - படம்: ரவி சிங்காரம்
குறிப்புச் சொற்கள்