தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அனல் பறக்கவைக்கத் துடிக்கும் சிட்டி, லிவர்பூல்

2 mins read
7b538626-24af-4573-9f61-1c2a595a7163
லிவர்பூல் நிர்வாகி யர்கன் கிளாப் (இடது), சிட்டி நிர்வாகி பெப் கார்டியோலா. - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

மான்செஸ்டர்: கடந்த சில ஆண்டுகளாக மிகவும் விறுவிறுப்பாக இருந்துவரும் மான்செஸ்டர் சிட்டி, லிவர்பூல் குழுக்களுக்கு இடையிலான காற்பந்தாட்டம் சனிக்கிழமையன்று மீண்டும் நடைபெறவுள்ளது.

இங்கிலி‌ஷ் பிரிமியர் லீக்கில் இவ்விரு குழுக்களும் சிங்கப்பூர் நேரப்படி சனிக்கிழமை இரவு 8.30 மணிக்கு மோதவுள்ளன.

சிட்டியைத் திக்குமுக்காட வைக்கக்கூடிய ஓரிரு குழுக்களில் ஒன்று என்ற பெருமை லிவர்பூலுக்கு உண்டு. அதேவேளையில் கடந்த இரு ஆண்டுகளில் சிட்டியும் இந்த ஆட்டத்தில் அபார வெற்றி கண்டிருக்கிறது.

ஆட்டத்தை முன்னிட்டு தான் மீண்டும் சிறப்பாக ஆடி வருவதாக நம்புகிறார் லிவர்பூலின் நட்சத்திர தற்காப்பு ஆட்டக்காரர் வெர்ஜில் வேன் டைக்.

32 வயது வேன் டைக் சென்ற பருவம் அவ்வளவு சரியாக விளையாடவில்லை. ஆனால் இப்பருவமோ லிவர்பூலின் ஆகச் சிறந்த விளையாட்டாளராக இருந்து வந்துள்ளார்.

“சென்ற ஆண்டு எனது தேர்ச்சி மேலும் கீழுமாக இருந்தது. சில ஆட்டங்கள் சிறப்பாக அமைந்தன, சில சற்று ஏமாற்றத்தைத் தந்தன,” என்றார் வேன் டைக். “நான் மிகச் சிறந்த விளையாட்டாளராகக் கருதப்படுகிறேன். நான் இன்னமும் சிறந்த விளையாட்டாளர்தான். அப்படி ஓர் எதிர்பார்ப்பை நான் உருவாக்கியுள்ளேன். அது எனக்கு மகிழ்ச்சி தருகிறது. எதிர்பார்ப்பை நான் பூர்த்தி செய்யாவிட்டால் ஏதோ குறை உள்ளது என்று அர்த்தம்,” என அவர் குறிப்பிட்டார்.

தற்போது உடல்ரீதியாகவும் மனதளவிலும் தான் சிறந்த நிலையில் இருப்பதாக நினைக்கிறார் வேன் டைக்.

மான்செஸ்டர் சிட்டியின் நட்சத்திர தாக்குதல் ஆட்டக்காரர் எர்லிங் ஹாலண்ட் தொடர்ந்து கோல்களைக் குவித்து வருகிறார். அவரை கோல் போட விடாமல் தடுக்கும் பெரும் பொறுப்பு வேன் டைக்குக்கு உள்ளது. அது அவ்வளவு எளிதல்ல.

காயமுற்றிருந்த ஹாலண்ட் குணமடைந்துவிட்டதாகவும் இந்த ஆட்டத்தில் களமிறங்குவார் என்றும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹாலண்ட், வேன் டைக் மட்டுமின்றி இரு குழுக்களிலும் நட்சத்திரப் பட்டாளமே உள்ளது. சிட்டியின் பெப் கார்டியோலா, லிவர்பூலின் யர்கன் கிளாப் இருவரும் அண்மை ஆண்டுகளில் உருவெடுத்திருக்கும் ஆகச் சிறப்பான காற்பந்து நிர்வாகிகள் என்றும் பலர் கருதுவதுண்டு.

குறிப்புச் சொற்கள்