அர்ஜென்டினா அணியிலிருந்து ஓய்வுபெறும் டி மரியா

1 mins read
448beb3f-4826-4932-a1df-d279f9681e8f
அர்ஜென்டினா காற்பந்து நட்சத்திரம் ஏங்கல் டி மரியா தேசிய அணியிலிருந்து ஓய்வுபெறவுள்ளார். - படம்: ஏஎஃப்பி

புவெனஸ் அய்ரஸ்: அர்ஜென்டினா காற்பந்து நட்சத்திரம் ஏங்கல் டி மரியா 2024ஆம் ஆண்டு தேசிய அணியிலிருந்து ஓய்வுபெறப்போவதாக அறிவித்துள்ளார்.

லத்தீன் அமெரிக்க தேசிய அணிகளுக்கான கோப்பா அமெரிக்கா போட்டி அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது. அதில் பங்கேற்ற பிறகு தான் ஓய்வுபெறப்போவதாக டி மரியா கூறினார்.

அப்போட்டியில் மற்ற கண்டங்களைக் சேர்ந்த ஓரிரு அணிகளும் இடம்பெறும்.

கடந்த 15 ஆண்டுகளாக இவர் அர்ஜென்டினாவுக்கு விளையாடி வந்துள்ளார். ரியால் மட்ரிட், மான்செஸ்டர் யுனைடெட், பிஎஸ்ஜி, யுவென்டஸ் என பெரிய குழுக்களில் விளையாடியிருக்கிறார்.

2022ஆம் ஆண்டு கத்தாரில் நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியில் அர்ஜென்டினா வாகை சூடியது. நடப்பு வெற்றியாளர் அணியான பிரான்சுக்கு எதிரான இறுதியாட்டத்தில் டி மரியா முதல் கோலைப் போட்டார். 3-3 எனும் கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது ஆட்டம்; பெனால்டிகளில் அர்ஜென்டினா வெற்றிபெற்றது.

தற்போது 35 வயதாகும் டி மரியா, அர்ஜென்டீனிய காற்பந்து வரலாற்றில் ஆகச் சிறந்த வீரர்களில் ஒருவர் என்று சொன்னால் மிகையில்லை.

இதற்கிடையே, கடந்த வாரம் நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டிக்கான தகுதியாட்டத்தில் அர்ஜென்டினா, பிரேசிலை 1-0 எனும் கோல் கணக்கில் வென்றது. அதற்குப் பிறகு தான் பதவியிலிருந்து விலக வாய்ப்பிருப்பதாக அர்ஜென்டினா பயிற்றுவிப்பாளர் லயனல் ஸ்கலோனியும் கூறியிருந்தார்.

ஸ்கலோனியின் தலைமையில்தான் அர்ஜென்டினா 36 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றியது.

குறிப்புச் சொற்கள்