தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்தியா-ஆஸ்திரேலியா: டி20 ஆட்டத்தில் பழிக்குப் பழி

1 mins read
e2922eb9-e444-4f3e-a161-6bb516c39caf
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 ஆட்டத்தில் கடைசி பந்தில் சிக்சர் அடித்து இந்தியாவை வெல்லச் செய்தார் ரிங்கு சிங். - படம்: ஏஎஃப்பி

விசாகப்பட்டினம்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் வெற்றியடைந்தது இந்தியா.

கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டியின் இறுதியாட்டத்தில் இந்தியா எதிர்பாரா விதமாகத் தோல்வியடைந்தது. அதற்கு நான்கே நாள்களுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 ஆட்டத்தில் இரண்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றிபெற்றது.

முதலில் பந்தடித்த ஆஸ்திரேலியா மூன்று விக்கெட்டுகள் இழப்பிற்கு 208 ஓட்டங்களை விளாசியது. வெற்றி இலக்கை அடைய கடைசி பந்து வரை இந்தியா போராடியது.

கடைசி ஓவரில் மூன்று பந்துகளில் மூன்று விக்கெட்டுகளை இழந்தது இந்தியா. எனினும் சமாளித்து இரண்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

எட்டு விக்கெட்டுகள் இழப்பிற்கு வெற்றி இலக்கான 209 ஓட்டங்களை அணி எடுத்தது.

இந்தியாவுக்கு சூர்யகுமார் யாதவ் ஆக அதிக ஓட்டங்களை எடுத்தார். 80 ஓட்டங்களை எடுத்து 18வது ஓவரில் சூர்யகுமார் ஆட்டம் இழந்தார்.

அதன் பிறகு வெற்றி இலக்கை அடைய இந்தியாவுக்கு 14 பந்துகளில் 15 ஓட்டங்கள் தேவைப்பட்டன. அக்சர் பட்டேல், ரவி பி‌ஷ்னோய், அர்‌ஷ்தீப் சிங் மூவரும் கடைசி ஓவரில் ஆட்டம் இழந்தனர்.

ஆட்டத்தின் கடைசி பந்தில் சிக்சர் விளாசி இந்தியாவை வெற்றிபெறச் செய்தார் ரிங்கு சிங்.

ஆஸ்திரேலியாவுக்கு ஜோஷ் இங்லிஸ் சதமடித்தார். 110 ஓட்டங்களைக் குவித்த இங்லிஸ், ஆண்கள் டி20 கிரிக்கெட் போட்டிகளில் ஆக வேகமாக சதமடித்த இரு ஆஸ்திரேலிய வீரர்களில் ஒருவராக உருவெடுத்தார்.

குறிப்புச் சொற்கள்