தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘சீற்றத்துடன் களமிறங்கக்கூடிய எவர்ட்டனைச் சந்திக்கத் தயாராய் இருங்கள்’

2 mins read
8f950e80-52d4-4d77-9938-912270b0ab04
10 புள்ளிகள் குறைக்கப்பட்ட எவர்ட்டன் கடுங்கோபத்துடன் விளையாட்டில் சீறக்கூடும் என்று எச்சரிக்கிறார் யுனைடெட் நிர்வாகி எரிக் டென் ஹாக். - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்
multi-img1 of 2

லிவர்பூல்: கடுங்கோபத்தினால் எவர்ட்டன், தனது குழுவுக்குப் பெரும் சவாலாக இருக்கக்கூடும் என்று மான்செஸ்டர் யுனைடெட் காற்பந்துக் குழுவின் நிர்வாகி எரிக் டென் ஹாக் எச்சரித்துள்ளார்.

இரு குழுக்களும் ஞாயிற்றுக்கிழமையன்று இங்கிலி‌ஷ் பிரிமியர் லீக்கில் மோதவுள்ளன. ஆட்டம் எவர்ட்டனின் குடிசன் பார்க் விளையாட்டரங்கில் நடைபெறும்.

நிதி விதிமுறைகளை மீறியதால் லீக்கில் எவர்ட்டனுக்கு 10 புள்ளிகள் குறைக்கப்பட்டன. அதனால் கடந்த சில வாரங்களாக நன்கு மீண்டுவந்த அக்குழு லீக் பட்டியலின் கடைசி சில இடங்களுக்குத் தள்ளப்பட்டது.

அதற்குப் பிறகு முதன்முறையாக எவர்ட்டன் லீக்கில் விளையாடவுள்ளது. தண்டனைக்கு எதிராக எவர்ட்டன் மேல்முறையீடு செய்யவிருக்கிறது. தண்டனையைக் கண்டு தனது விளையாட்டாளர்கள் துவண்டு போகமாட்டார்கள் என்று கூறியிருந்தார் குழுவின் நிர்வாகி ‌ஷோன் டைக்.

“எவர்ட்டனின் ஆத்திரம் அதன் விளையாட்டாளர்களை ஊக்குவிக்கலாம். அவ்வாறு நிகழ்ந்தால் அவர்களின் விளையாட்டுக்கு நாங்கள் ஈடுகொடுக்கவேண்டும். அதை நாம் செய்தால் ஆட்டத்தில் வெல்ல எங்களுக்கு நல்ல வாய்ப்பு இருக்கும்,” என்றார் டென் ஹாக்.

அனைத்து போட்டிகளிலும் தான் களமிறங்கிய கடைசி ஐந்து ஆட்டங்களில் யுனைடெட் மூன்றில் தோல்வியடைந்தது. இப்பருவத்தில் அக்குழு பெரிதும் சிரமப்பட்டு வந்துள்ளது.

எனினும், கடந்த ஐந்து லீக் ஆட்டங்களில் நான்கில் வெற்றிகண்டது யுனைடெட். தாக்குதல் ஆட்டக்காரர்கள் அதிகம் சோபிக்காவிட்டாலும் மற்ற விளையாட்டாளர்கள் யுனைடெட்டைப் பல முறை மீட்டு வந்துள்ளனர்.

பல விளையாட்டாளர்கள் காயமுற்றது யுனைடெட் சரியாக விளையாடாததற்கு ஒரு முக்கியக் காரணம். அந்த வகையில் காயமுற்றதால் மூன்று மாதங்களாக விளையாடாமல் இருந்த இங்கிலாந்து வீரர் லூக் ‌‌ஷா குணமடைந்திருப்பது குழுவிற்குப் பெரும் நற்செய்தியாக இருக்கும்.

அதேபோல, மற்றோர் இங்கிலாந்து வீரர் மேசன் மவுன்ட் சென்ற வாரம் காயமுற்றது யுனைடெட்டிற்குப் பிரச்சினையாக அமையலாம்.

சிங்கப்பூர் நேரப்படி பின்னிரவு 12.30 மணிக்கு யுனைடெட்டும் எவர்ட்டனும் சந்திக்கின்றன.

குறிப்புச் சொற்கள்