தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

டி20 தொடர்: மீண்டும் ஆஸ்திரேலியாவை வென்ற இந்தியா

2 mins read
5c86ad05-faac-4d54-86cc-eb731f6d5ad8
இந்தியாவின் ஜெய்ஸ்வால் பந்தைப் பிடித்து ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித்தை ஆட்டம் இழக்க வைத்த தருணம். - படம்: ஏஎஃப்பி

திருவனந்தபுரம்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரின் இரண்டாம் ஆட்டத்திலும் வென்றுள்ளது இந்தியா.

கேரளத் தலைநகர் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 44 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றிகண்டது.

முதலில் பந்தடித்த இந்தியா நான்கு விக்கெட்டுகள் இழப்புக்கு 235 ஓட்டங்களைக் குவித்தது. அதற்குப் பிறகு ஆஸ்திரேலியா ஒன்பது விக்கெட்டுகள் இழப்புக்கு 191 ஓட்டங்களை மட்டுமே எடுத்து வெற்றி இலக்கை அடையத் தவறியது.

இந்தியாவின் இன்னிங்சில் முதலில் களமிறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால், பின்னர் இ‌ஷான் கி‌ஷன் இருவரும் சிறப்பாக விளையாடி ஓட்டங்களைக் குவித்தனர். 25 பந்துகளில் 53 ஓட்டங்களை விளாசினார் ஜெய்ஸ்வால். கி‌ஷன் 32 பந்துகளில் 52 ஓட்டங்களை எடுத்தார்.

43 பந்துகளில் 58 ஓட்டங்களை எடுத்தார் ருதுராஜ் கெய்க்வாட். ஆட்டம் இழக்காத ரிங்கு சிங் ஒன்பது பந்துகளில் 31 ஓட்டங்களைக் குவித்தார். அவர் பல சிக்சர்களையும் பவுண்டரிகளையும் எடுத்து அசத்தினார்.

58 ஓட்டங்கள் எடுப்பதற்குள்ளேயே ஆஸ்திரேலியா நான்கு விக்கெட்டுகளை இழந்தது. தொடரின் முதல் ஆட்டத்தில் சதமடித்த ஜோ‌ஷ் இங்லிஸ் இரண்டே ஓட்டங்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

ஆஸ்திரேலிய அணித்தலைவர் மேத்யூ வேட் ஆட்டம் இழக்காமல் 23 பந்துகளில் 42 ஓட்டங்களை எடுத்தார். அதன் மூலம் இரு அணிகளுக்கும் இடையே ஓட்டங்களில் இருந்த வித்தியாசம் குறைந்தது.

இந்த வெற்றியைத் தொடர்ந்து இத்தொடரில் 2-0 எனும் ஆட்டக்கணக்கில் முன்னணி வகிக்கிறது இந்தியா. தொடரின் மூன்றாவது ஆட்டம் செவ்வாய்க்கிழமையன்று கெளஹாத்தி நகரில் நடைபெறும்.

தொடரின் முதல் ஆட்டத்தில் இந்தியா இரண்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. அந்த ஆட்டம் இவ்விரு அணிகளும் மோதிய இவ்வாண்டின் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ண இறுதியாட்டத்துக்கு நான்கே நாள்களுக்குப் பிறகு நடந்தது.

குறிப்புச் சொற்கள்