தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உலகைத் திரும்பிப் பார்க்கவைத்த கர்னாச்சோ

2 mins read
b2939fec-b9b9-46f1-bf04-9103dd713629
எவர்ட்டனுக்கு எதிரான ஆட்டத்தில் காற்றில் தாவி தலைகீழாக இருந்தபடி கோல் போட்ட மான்செஸ்டர் யுனைடெட்டின் கர்னாச்சோ. - படம்: ராய்ட்டர்ஸ்

லிவர்பூல்: எவர்ட்டனுக்கு எதிரான இங்கிலி‌ஷ் பிரிமியர் லீக் காற்பந்தாட்டத்தில் 3-0 எனும் கோல் கணக்கில் வெற்றிகண்டது மான்செஸ்டர் யுனைடெட்.

இப்பருவத்தில் சிரமப்பட்டுவந்த யுனைடெட்டுக்கு இந்த வெற்றி சிறப்பான ஒன்றாக அமைந்தது. எனினும், யுனைடெட் வெற்றியடைந்ததைவிட அதன் இளம் வீரர் அலெஹாண்ட்ரோ கர்னாச்சோ போட்ட அபாரமான கோல்தான் பலரின் கவனத்தை ஈர்த்தது.

ஆட்டம் தொடங்கி மூன்றே நிமிடங்களுக்குள் காற்றில் தாவி தலைகீழாக கோல் போட்டு யுனைடெட்டை முன்னுக்கு அனுப்பினார் கர்னாச்சோ. ‘ஓவர்ஹெட் கிக் கோல்’ என்றழைக்கப்படும் இத்தகைய கோல்கள் விழுவது அரிது.

பல ஆண்டுகளுக்கு முன்பு முன்னாள் யுனைடெட் வீரர் வேன் ரூனி மான்செஸ்டர் சிட்டிக்கு எதிரான ஆட்டத்தில் கிட்டத்தட்ட இதேபோன்ற கோலைப் போட்டார். கர்னாச்சோவின் கோல் அதைப் பலருக்கு நினைவூட்டியது.

கர்னாச்சோவின் கோல் ரூனியின் கோலைவிடச் சிறப்பாக இருந்தது என்று கருத்துரைத்தார் முன்னாள் யுனைடெட் அணித்தலைவர் கேரி நெவில்.

“நான் இதுவரை விளையாட்டரங்கிற்குச் சென்று நேரில் கண்டுகளித்த ஆட்டங்கள் எதிலும் இவ்வளவு சிறப்பான ஓவர்ஹெட் கிக் கோலைப் பார்த்ததாக நினைவில் இல்லை. சிட்டிக்கு எதிரான ஆட்டத்தில் ரூனி அத்தகைய கோலைப் போடும்போது நான் அரங்கில்தான் இருந்தேன்,” என்றார் நெவில்.

கர்னாச்சோவால் யுனைடெட்டுக்குப் பல சாகசங்களைப் புரியக்கூடிய ஆற்றல் உள்ளது என்றார் அக்குழுவின் நிர்வாகி எரிக் டென் ஹாக்.

ஆட்டத்தின் 56வது நிமிடத்தில் யுனைடெட்டுக்குக் கிடைத்த பெனால்டி வாய்ப்பைப் பயன்படுத்தி கோல் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கினார் மார்க்கஸ் ரே‌ஷ்ஃபர்ட். விஏஆர் எனும் காணொளிவழி இயங்கும் துணை நடுவரின் தலையீட்டைத் தொடர்ந்து நடுவர் தனது முடிவை மாற்றிக்கொண்ட பிறகு பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது.

ஆட்டத்தின் 75வது நிமிடத்தில் யுனைடெட்டின் மூன்றாது கோலைப் போட்டார் ஆன்டனி மார்சியால். அது, இப்பருவத்தில் மார்சியால் போட்ட முதல் கோல்.

குறிப்புச் சொற்கள்