லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்தில் தொடர்ந்து மூன்று ஆட்டங்களில் தோல்வியடைந்துள்ளது டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர்.
ஞாயிற்றுக்கிழமையன்று ஆஸ்டன் வில்லாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் முன்னுக்குச் சென்ற பிறகும் ஸ்பர்ஸ் தோல்வியடைந்தது.
ஆட்டத்தின் 22வது நிமிடத்தில் ஜியோவானி ல செல்சோ ஸ்பர்சை முன்னுக்கு அனுப்பினார். அதற்குப் பிறகு முற்பாதியாட்டத்தின் கடைசி சில நிமிடங்களில் வில்லாவின் பாவ் டோரஸ் கோல் எண்ணிக்கையைச் சமப்படுத்தினார்.
61வது நிமிடத்தில் வில்லாவின் நட்சத்திரத் தாக்குதல் ஆட்டக்காரர் ஒலி வாட்கின்ஸ் வெற்றி கோலைப் போட்டார். 2-1 எனும் கோல் கணக்கில் வில்லா வென்றது.
இந்த வெற்றியைத் தொடர்ந்து வில்லா லீக் பட்டியலில் நான்காவது இடத்துக்கு முன்னேறியது. இப்பருவத்தில் சிறப்பாக விளையாடிவரும் வில்லா, சென்ற லீக் ஆட்டத்தில் நொட்டிங்கம் ஃபாரஸ்ட்டிடம் தோல்வியடைந்தது. அதற்குப் பிறகு வில்லா களையிழந்துவிடுமோ என்ற அச்சம் தலைதூக்கியது.
ஸ்பர்சை வென்றதன் மூலம் ஐயங்களை உதறித் தள்ளியது வில்லா. அதேவேளை, இப்பருவத்தின் முதல் 10 ஆட்டங்களில் சிறப்பாக விளையாடிவந்த ஸ்பர்ஸ் எதிர்பாரா விதமாக திடீர் சரிவை எதிர்நோக்குகிறது.

