லண்டன்: காணொளி உதவி நடுவர் சர்ச்சையாலும் நடுவர் எடுத்த முடிவுகளாலும் உல்வ்ஸ் குழுவின் நிர்வாகி கேரி ஓ நீல் கோபமடைந்துள்ளார்.
இம்மாதம் 27ஆம் தேதியன்று இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டி ஆட்டத்தில் ஃபுல்ஹமும் உல்வ்ஸ் குழுவும் மோதின.
நடுவர் எடுத்த முடிவுகள் உல்வ்ஸ் குழுவுக்குச் சாதகமில்லாமல் போனதுடன் 3-2 எனும் கோல் கணக்கில் உல்வ்ஸ் தோற்றது.
ஆட்டத்தின் முதல் கோலை 7வது நிமிடத்தில் ஃபுல்ஹம் போட்டது.
22வது நிமிடத்தில் உல்வ்ஸ் ஆட்டத்தைச் சமன் செய்தது.
ஆட்டத்தின் 59வது நிமிடத்தில் ஃபுல்ஹமுக்கு பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது.
காணொளி உதவி நடுவர் முறை பெனால்டி வழங்கப்பட்டது.
காணொளியை நீண்டநேரத்துக்கு ஆய்வு செய்த பிறகு பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
பெனால்டி வாய்ப்பை கோலாக்கினார் ஃபுல்ஹமின் வில்லியன்.
ஆட்டத்தின் 75வது நிமிடத்தில் உல்வ்ஸ் குழுவுக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதைப் பயன்படுத்தி ஆட்டத்தை சமப்படுத்தினார் தென்கொரிய ஆட்டக்காரர் ஹுவாங் ஹீ சாங்.
ஆட்டம் முடிய சில வினாடிகள் மட்டுமே இருந்த நிலையில், ஃபுல்ஹமுக்கு இன்னொரு பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது.
முதலில் பெனால்டி வாய்ப்பை வழங்காமல் தொடர்ந்து விளையாடும்படி நடுவர் கூறியிருந்தார்.
ஆனால் காணொளி உதவி நடுவர் முறைக்கான அதிகாரிகள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அவர் அதை ஆராய்ந்து ஃபுல்ஹமுக்கு பெனால்டி வாய்ப்பை வழங்கினார்.
அதன் மூலம் ஃபுல்ஹமின் வெற்றி கோலைப் போட்டார் வில்லியன்.
காணொளி உதவி நடுவர் முறை மூலம் தவறான முடிவுகள் எடுக்கப்பட்டதாக உல்வ்ஸ் குழுவின் நிர்வாகி கேரி ஓ நீல் குறைகூறினார்.

