தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்திய அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராகத் தொடரும் டிராவிட்

2 mins read
407f372f-fdf4-4e3f-b877-ea8bb2fa1c60
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளரும் முன்னாள் நட்சத்திரப் பந்தடிப்பாளருமான ராகுல் டிராவிட். - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக ராகுல் டிராவிட் தொடரவுள்ளார்.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தனது இணையத்தளத்தில் இதை அறிவித்துள்ளது.

இந்திய அணியில் டிராவிட்டுடன் இணைந்து பணியாற்றுவோர் அனைவரும் தங்களின் பொறுப்புகளில் தொடரவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டது.

தலைமைப் பயிற்றுவிப்பாளராகத் தொடருமாறு பிசிசிஐ டிராவிட்டிடம் கேட்டுக்கொண்டதாக இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ இணையத்தளம் தெரிவித்திருந்தது. இதன் தொடர்பில் பிசிசிஐ சென்ற வாரம் டிராவிட்டைச் சந்தித்ததாகச் சந்தித்ததாகவும் கூறப்பட்டது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக டிராவிட் அணியில் உருவாக்கிய கட்டமைப்பை மையமாகக் கொண்டு செயல்படும் நோக்கில் அவரையே பணியில் தொடரச் செய்ய பிசிசிஐ விரும்பியதாக நம்பப்பட்டது. வேறு தலைமைப் பயிற்றுவிப்பாளர் நியமிக்கப்பட்டால் செயல்பாட்டுக்கு இடையூறு வரக்கூடும் என்ற அச்சம் இருப்பதே அதற்குக் காரணம்.

அண்மையில் நடந்துமுடிந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டியில் டிராவிட்டின் தலைமையில் அபாரமாக விளையாடி இறுதியாட்டத்துக்கு முன்னேறியது இந்தியா. எனினும், இறுதியாட்டத்தில் இந்தியா, ஆஸ்திரேலியாவிடம் எதிர்பாரா விதமாகத் தோல்வியடைந்தது.

டிசம்பர் மாதம் 10ஆம் தேதியன்று இந்தியாவுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் இடையிலான தொடர் தொடங்கவிருக்கிறது. அதில் மூன்று டி20 ஆட்டங்கள், மூன்று ஒருநாள் ஆட்டங்கள், இரண்டு டெஸ்ட் ஆட்டங்கள் அடங்கும்.

பிசிசிஐயின் வேண்டுகோளை டிராவிட் ஏற்றுக்கொண்டதற்குப் பிறகு அத்தொடரில் இந்திய அணியை வழிநடத்துவதே அவரின் முதல் பணியாகும். அத்தொடர் முடிந்த பிறகு ஐந்து ஆட்டங்களைக் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியாவும் இங்கிலாந்தும் மோதும்.

பின்னர் 2024ஆம் ஆண்டு ஜூன் மாதம் டி20 உலகக் கிண்ணப் போட்டி நடைபெறும்.

2021ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கிண்ணப் போட்டிக்குப் பிறகு டிராவிட் இந்திய அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டார். ரவி சாஸ்திரியிடமிருந்து அவர் அப்பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்