மான்செஸ்டர்: தனது அசுர வேட்டையைத் தொடரும் காற்பந்து நட்சத்திரம் எர்லிங் ஹாலண்ட் மேலும் ஒரு சாதனையைப் படைத்துள்ளார்.
ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் போட்டியின் வரலாற்றில் ஆகக் குறைவான ஆட்டங்களில் 40 கோல்களைப் போட்ட வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் மான்செஸ்டர் சிட்டியின் ஹாலண்ட்.
இப்பருவத்தின் சாம்பியன்ஸ் லீக் போட்டியில் ஜெர்மனியின் ஆர்பி லைப்சிக்குக்கு எதிரான ஆட்டத்தில் சிட்டி 3-2 எனும் கோல் கணக்கில் வென்றது. இந்த ஆட்டத்தில் சிட்டியின் முதல் கோலைப் போட்டார் ஹாலண்ட்.
இந்த ஜி பிரிவு ஆட்டத்தில் லைப்சிக் முதலில் 2-0 எனும் கோல் கணக்கில் முன்னணி வகித்தது. சிட்டி மீண்டு வந்து வெற்றிபெற்றது.
ஆட்டத்துக்கு முன்பே சிட்டி ரவுண்ட் ஆஃப் 16 எனும் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவது உறுதியாகியிருந்தது.
தனது நட்சத்திரத் தாக்குதல் ஆட்டக்காரரான ஹாலண்ட் சாதனை மேல் சாதனை படைப்பதைத் தொடர்ந்து அவரைப் பெரிதும் பாராட்டினார் சிட்டி நிர்வாகி பெப் கார்டியோலா.