கடைசி நேரத்தில் தடுமாறிய நியூகாசல்

கடைசி நேரத்தில் தடுமாறிய நியூகாசல்

1 mins read
deda77ff-8121-4f27-8d6d-fbbd981620eb
நியூகாசலுக்கு எதிரான ஆட்டத்தில் பெனால்டி வாய்ப்பை கோலாக்கி கோல் எண்ணிக்கையைச் சமப்படுத்திய பிஎஸ்ஜியின் எம்பாப்பே. - படம்: இபிஏ

பாரிஸ்: ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் காற்பந்தாட்டத்தில் இங்கிலாந்தின் நியூகாசல் யுனைடெட்டும் பிரான்சின் பிஎஸ்ஜியும் 1-1 எனும் கோல் கணக்கில் சமநிலை கண்டன.

இதனால் இங்கிலி‌ஷ் பிரிமியர் லீக் குழுவான நியூகாசல் ரவுண்ட் ஆஃப் 16 எனும் போட்டியின் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவது கேள்விக்குறியானது.

இந்த எஃப் பிரிவு ஆட்டத்தின் 24வது நிமிடத்தில் நியூகாசலை முன்னுக்கு அனுப்பினார் அலெக்சாண்டர் ஐசக். பிறகு ஆட்டம் நிறைவடையவிருந்த நேரத்தில் பிஎஸ்ஜிக்குக் கிடைத்த பெனால்டி வாய்ப்பை கோலாக்கினார் கிலியோன் எம்பாப்பே.

எஃப் பிரிவில் பிஎஸ்ஜி அதன் கடைசி ஆட்டத்தில் வென்றால் அது அடுத்த சுற்றுக்கு முன்னேறும். அத்தகைய சூழலில் நியூகாசல் அதன் ஆட்டத்தில் வென்றாலும் பலனில்லை.

பல ஆண்டு இடைவெளிக்குப் பிறகு சாம்பியன்ஸ் லீக்கிற்குத் தகுதிபெற்ற நியூகாசல், போட்டியில் முதலில் சிறப்பாக விளையாடியது. ஆனால் அதற்குப் பிறகு அக்குழு களையிழந்துபோனது.

எஃப் பிரிவில் தற்போது ஜெர்மனியின் பொருசியா டோர்ட்மண்ட் முதலிடம் வகிக்கிறது. இரண்டாவது இடத்தில் பிஎஸ்ஜியும் மூன்றாவது இடத்தில் நியூகாசலும் நான்காவது இடத்தில் இத்தாலியின் ஏசி மிலானும் உள்ளன.

ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களில் முடிக்கும் குழுக்கள் மட்டுமே அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.

குறிப்புச் சொற்கள்