தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

யூரோப்பா லீக்: அடுத்த சுற்றுக்கு முன்னேறிய லிவர்பூல்

2 mins read
ff772c87-6b47-4131-b920-23d4cabe5436
யூரோப்பா லீக்கில் லிவர்பூலின் நான்காவது கோலைப் போடும் கொடி காக்போ (வலது). - படம்: ராய்ட்டர்ஸ்

லிவர்பூல்: யூரோப்பா லீக் காற்பந்துப் போட்டியில் இங்கிலி‌ஷ் பிரிமியர் லீக் குழுவான லிவர்பூல் காலிறுதிக்கு முந்திய சுற்றுக்கு முன்னேறுவது உறுதியாகிவிட்டது.

ஆஸ்திரியாவின் எல்ஏஎஸ்கே குழுவுக்கு எதிரான ஆட்டத்தில் கொடி காக்போ லிவர்பூலுக்கு இரண்டு கோல்களைப் போட்டார். லூயிஸ் டியாஸ், முகம்மது சாலா இருவரும் எஞ்சிய கோல்களைப் போட்டனர். பெனால்டி வாய்ப்பை கோலாக்கினார் சாலா.

இந்த வெற்றியைத் தொடர்ந்து லிவர்பூல் ‘இ’ பிரிவில் முதலிடத்தில் முடிப்பது உறுதியானது. அதனால் காலிறுதிக்கு முந்திய சுற்றுக்கு முன்னேற அக்குழு பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள பிளேஆஃப் சுற்றில் விளையாடத் தேவையில்லாமல் போனது.

அதனால் இந்த வெற்றி தனது குழுவுக்கு மிக முக்கியமானதாக அமைந்தது என்றார் லிவர்பூல் நிர்வாகி யர்கன் கிளாப். இப்போதிருந்து தனது குழு நிறைய ஆட்டங்களில் விளையாடவிருப்பதால் கூடுதல் ஆட்டங்களைக் கையாளவேண்டிய நிலை இருக்காது என்பது அதற்குக் காரணம்.

இதர இங்கிலி‌ஷ் பிரிமியர் லீக் குழுக்களான பிரைட்டன், வெஸ்ட் ஹேம் இரண்டும் குறைந்தபட்சம் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறுவது உறுதியானது.

வெஸ்ட் ஹேம் செர்பியாவின் பக்கா டொப்பொலாவை 1-0 எனும் கோல் கணக்கில் வென்றது. அதே கோல் எண்ணிக்கையில் கிரீசின் ஏஇகே ஏத்தன்சை வென்றது பிரைட்டன்.

‘ஏ’ பிரிவில் வெஸ்ட் ஹேம் முதலிடத்திலும் ‘பி’ பிரிவில் பிரைட்டன் இரண்டாம் இடத்திலும் உள்ளன.

ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடத்தைப் பிடிக்கும் குழு நேரடியாக ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கும் இரண்டாவதாக வரும் குழு பிளேஆஃப் சுற்றுக்கும் முன்னேறும்.

குறிப்புச் சொற்கள்