ஐபிஎல் 2024 ஏலத்தில் 1,166 கிரிக்கெட் வீரர்கள்

ஐபிஎல் 2024 ஏலத்தில் 1,166 கிரிக்கெட் வீரர்கள்

2 mins read
3a355438-25c0-46fc-a7fa-77210bc9a34e
உலக கிண்ணத்தில் சிறப்பாக விளையாடிய நியூசிலாந்தின் ரச்சின் ரவீந்தராவும் டேரில் மிட்செல்லும் நல்ல விலைக்கு விற்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. - படம்: ராய்ட்டர்ஸ்

மும்பை: இந்தியன் பிரீமியர் லீக் என்று அழைக்கப்படும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான ஏலம் டிசம்பர் 19ஆம் தேதி துபாயில் நடக்கவுள்ளது.

இந்த ஏலத்தில் விற்கப்படும் வீரர்கள் ஐபிஎல் 2024 பருவத்தில் ஐபிஎல் அணிகளுக்காக விளையாடுவார்கள்.

அண்மையில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கோல்கத்தா நைட் ரைடர்ஸ் உள்ளிட்ட அனைத்து ஐபிஎல் குழுக்களும் தங்களுக்கு தேவையான வீரர்களை அணியில் வைத்துக்கொண்டு மற்ற வீரர்களை அணியில் இருந்து நீக்கின. இதில் சில முன்னணி நட்சத்திரங்கள் பெயர்களும் நீக்கிய வீரர்கள் பட்டியலில் இடம் பெற்றிருந்தன.

இந்நிலையில் 1,166 கிரிக்கெட் வீரர்கள் ஏலத்தில் கலந்துகொள்ள தங்களது பெயர்களை பதிவு செய்துள்ளனர். அவர்களில் 830 பேர் இந்திய வீரர்கள்.

77 இடங்களுக்கு இவ்வளவு பேர் போட்டியிடுவது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த 77 இடங்களில் 30 இடங்கள் வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியில் வெற்றிபெற்ற ஆஸ்திரேலிய வீரர்கள் பலர் ஐபிஎல் 2024 பருவத்தில் விளையாட விருப்பம் தெரிவித்துள்ளனர். அவர்களது பெயர்களையும் ஏலத்தில் சேர்த்துள்ளனர்.

டிரவிஸ் ஹெட், பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க் உள்ளிட்ட ஆஸ்திரேலிய வீரர்கள் ஏலத்தில் பதிவு செய்துள்ளனர். அவர்களின் குறைந்தப்பட்ச ஏலத்தொகையை 2 கோடி ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளனர்.

மேலும் ஸ்டீவ் ஸ்மித், ஜாஸ் ஹேசல்வுட், ஜான் இங்லிஸ் உள்ளிட்ட ஆஸ்திரேலிய வீரர்கள் ஏலத்தில் பதிவு செய்துள்ளனர்.

உலக கிண்ணத்தில் சிறப்பாக விளையாடி அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள நியூசிலாந்தின் ரச்சின் ரவீந்தராவும் ஏலத்தில் கலந்துகொள்கிறார். அவரின் குறைந்தபட்ச ஏலத்தொகை 50 லட்சம் ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டேரில் மிட்செல்லும் நல்ல விலைக்கு விற்கப்படுவார் என்று கூறப்படுகிறது.

தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஜெரால்ட் கோட்சியாவுக்கு ஏலத்தில் அதிக போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காயம் காரணமாக ஜோஃப்ரா ஆர்ச்சர், பென் ஸ்டோக்ஸ் உள்ளிட்ட சில முக்கியமான வீரர்கள் இம்முறை ஐபிஎல் ஆட்டங்களில் பங்கேற்கவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

ஐபிஎல் அனுபவம் உள்ள இந்திய வீரர்களும் ஏலத்தில் கலந்துகொள்ளவுள்ளனர். வருண் ஆரோன், கே எஸ் பரத், கேதர் ஜாதவ், கருன் நாயர், மனி‌ஷ் பாண்டே, ஹர்சல் பட்டேல், சேத்தன் சக்காரியா, சர்துல் தக்கூர், ஜெயதேவ் உனத்ட்கட், உமே‌ஷ் யாதவ் உள்ளிட்டவர்கள் ஏலத்தில் பங்கேற்கின்றனர்.

தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இந்தீஸ், அயர்லாந்து, இலங்கை, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே, நமீபியா, நேப்பாளம், நெதர்லாந்து, ஸ்காட்லாந்து, அமெரிக்கா, ஐக்கிய அரபு சிற்றரசுகள் உள்ளிட்ட நாடுகளில் இருந்து கிரிக்கெட் வீரர்கள் ஐபிஎல் ஏலத்தில் கலந்துகொள்ள பதிவு செய்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்