தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கார்டியோலா: காற்பந்தில் துரதிர்‌‌ஷ்டம் என்பது கிடையாது

2 mins read
9dd87973-e847-495b-83db-625cde15aaae
சிட்டிக்கு எதிரான ஆட்டத்தில் ஸ்பர்சின் முதல் கோலைப் போடும் சொன் ஹியோங் மின் (நடுவில்). - படம்: ராய்ட்டர்ஸ்

மான்செஸ்டர்: இங்கிலி‌ஷ் பிரிமியர் லீக் காற்பந்தாட்டத்தில் மான்செஸ்டர் சிட்டியும் டோட்டன்ஹம் ஹாட்ஸ்பரும் மோதிய ஆட்டம் 3-3 எனும் கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது.

பிரிமியர் லீக் நடப்பு வெற்றியாளரான சிட்டி, கடந்த மூன்று லீக் ஆட்டங்களில் சமநிலை கண்டுள்ளது.

கடந்த ஆறு ஆண்டுகளில் முதன்முறையாக சிட்டி தொடர்ந்து மூன்று லீக் ஆட்டங்களில் வெல்லத் தவறியது. மேலும், இப்பருவத்தில் ஆகஸ்ட் மாத நடுப்பகுதியிலிருந்து சிட்டி லீக்கில் இரண்டு ஆட்டங்களில் மட்டுமே கோல்களை விட்டுக்கொடுக்காமல் இருந்திருக்கிறது.

இது துரதிர்‌ஷ்டமான நிகழ்வா என்று கேட்கப்பட்டபோது, காற்பந்தில் துரதிர்‌ஷ்டம் என்பது கிடையாது என்று தான் நம்புவதாக சிட்டி நிர்வாகி பெப் கார்டியோலா கூறினார் என்று பிபிசி ஊடகம் தெரிவித்தது.

“காற்பந்தில் துரதிர்‌ஷ்டம் என்ற அம்சம் கிடையாது என்பதை நான் யோஹான் கிரைஃபிடமிருந்து (மறைந்த காற்பந்து நட்சத்திரம்) கற்றுக்கொள்கிறேன்,” என்றார் கார்டியோலா.

“நல்ல தருணங்கள் (மட்டும்) நல்ல குழுக்களை சித்திரிப்பதில்லை. சிறப்பாக விளையாடும்போதும் ஆட்ட முடிவுகள் நமக்கு சாதகமாக வராத இப்படிப்பட்ட சூழலை நாம் எதிர்நோக்குவது இது முதன்முறை அல்ல. இதுபோன்ற சிக்கலில் இருந்தபோதெல்லாம் தீர்வைக் கண்டுபிடித்திருக்கிறோம். ஆனால் அண்மையில் ஆட்ட முடிவுகள் எதிர்பார்த்த வண்ணம் அமையாததால் நாங்கள் சிரமப்பட்டுக்கொண்டிருக்கிறோம்,” என்று கார்டியோலா குறிப்பிட்டார்.

ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் ஸ்பர்சை முன்னுக்கு அனுப்பினார் அணித்தலைவர் சொன் ஹியோங் மின். அதற்குப் பிறகு அவரே சொந்த வலைக்குள் பந்தை அனுப்பியதால் கோல் எண்ணிக்கை சமமானது.

பின்னர் ஃபில் ஃபோடன் கோல் போட்டு முற்பாதியாட்டத்தில் சிட்டியை முன்னுக்கு அனுப்பினார். 69வது நிமிடத்தில் ஸ்பர்சின் ஜியோவானி ல செல்சோ மீண்டும் கோல் எண்ணிக்கையைச் சமப்படுத்தினார்.

81வது நிமிடத்தில் ஜேக் கிரீலி‌ஷ் மீண்டும் சிட்டியை முன்னுக்கு அனுப்பினார். ஆனால் ஆட்டத்தில் கடைசி சில நிமிடங்களில் டே‌ஷான் குலுசெவ்ஸ்கி மீண்டும் கோல் எண்ணிக்கையைச் சமப்படுத்தினார்.

இந்நிலையில் ஆட்டத்தில் நடுவரின் முடிவு ஒன்று அதிருப்தி தந்ததால் சமூக ஊடகத்தில் கோபத்தை வெளிப்படுத்தினார் சிட்டி நட்சத்திரம் எர்லிங் ஹாலண்ட். அந்த விவகாரம் சர்ச்சையை எழுப்பியுள்ளது.

குறிப்புச் சொற்கள்