பெங்களூரு: இந்திய-ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையே ஞாயிற்றுக்கிழமை பெங்களூரில் நடைபெற்ற கடைசி மற்றும் ஐந்தாவது டி20 அனைத்துலகப் போட்டியில் புதிய மைல்கல்லை எட்டினார் இந்திய அணியின் ருதுராஜ் கெய்க்வாட், 26.
ஐந்து ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரை 223 ஓட்டங்களுடன் (சராசரி ஓட்ட எண்ணிக்கை 55.75) நிறைவுசெய்தார் இவர். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் ஆக அதிக ஓட்டங்களை எடுத்துள்ள வீரர் இவரே.
முன்னதாக, நியூசிலாந்தின் மார்டின் குப்டில் இச்சாதனைக்குச் சொந்தக்காரராக இருந்து வந்துள்ளார். 2021ல் ஐந்து ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் 218 ஓட்டங்களை அவர் எடுத்திருந்தார்.
ஞாயிற்றுக்கிழமை நடந்த ஆட்டத்தில் ருதுராஜ் வெறும் 10 ஓட்டங்களில் ஆட்டமிழந்தாலும், கடந்த நான்கு ஆட்டங்களில் இவர் வெளிப்படுத்திய அபார ஆட்டத்திறனால் இந்த மைல்கல்லை எட்ட முடிந்தது.
ஒட்டுமொத்தமாக, டி20 தொடரில் ஆக அதிக ஓட்டங்களை எடுத்துள்ள இந்திய வீரர்கள் பட்டியலில் கே.எல்.ராகுல், விராத் கோஹ்லிக்கு அடுத்த நிலையில் ருதுராஜ் உள்ளார்.
ஐந்தாவது டி20 ஆட்டத்தில் ஆறு ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வென்ற இந்திய அணி (160 ஓட்டங்கள்), 4-1 எனும் ஆட்டக் கணக்கில் தொடரைக் கைப்பற்றியது.
இந்திய அணியின் வெற்றிக்கு அரை சதம் எடுத்த ஷ்ரேயாஸ் ஐயர் ஊன்றுகோலாக விளங்கினார்.