காற்பந்து: நியூகாசலை வீழ்த்திய எவர்ட்டன்

2 mins read
699b78bf-8b53-4c05-b28d-e0597613cac8
ஆட்டத்தின் கடைசி 20 நிமிடங்களில் எவர்டன் அசத்தலாக விளையாடி மூன்று கோல்கள் அடித்து வெற்றியை உறுதிசெய்தது. - படம்: ராய்ட்டர்ஸ்

லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்து போட்டியில் வெள்ளிக்கிழமை பின்னிரவு நடந்த ஆட்டத்தில் எவர்டன் அணி நியூகாசல் யுனைடெட் அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அசத்தியுள்ளது.

இரண்டு அணிகளும் முதல் 75 நிமிடங்கள் கோல் அடிக்கத் திணறினர். இருப்பினும் கடைசி 20 நிமிடங்களில் எவர்டன் அசத்தலாக விளையாடி மூன்று கோல்கள் அடித்து வெற்றியை உறுதிசெய்தது.

நியூகாசல் அணியின் தற்காப்பு ஆட்டக்காரர் கெய்ரன் டிரிப்பியர் அடுத்தடுத்து இரண்டு தவறுகள் செய்தார். அந்த இரண்டு தற்காப்பு தவறுகளும் கோலாக மாறி நியூகாசல் அணிக்கு பாதகமாக அமைந்தது.

ஆட்டத்தின் 79ஆவது நிமிடத்தில் எவர்ட்டன் அணிக்கு முதல் கோலை அடித்தார் வைட் மெக்நீல், அதன் பின்னர் 86, 96 ஆவது நிமிடங்களில் எவர்ட்டனுக்கு கோல்கள் கிடைத்தன.

புள்ளிப்பட்டியலில் அடிபாதாளத்தில் இருந்த எவர்ட்டன் அணி இந்த வெற்றியின் மூலம் 17ஆவது இடத்திற்கு முன்னேறியது.

எவர்ட்டன் அணி 2021-2022 பருவத்தில் விதிமுறைகளை மீறியதற்காக இந்த பருவத்தில் 10 புள்ளிகள் குறைக்கப்பட்டன. அது அந்த அணிக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது.

பருவத்தின் முடிவில் புள்ளிப்பட்டியலில் கடைசி மூன்று இடங்களைப் பிடிக்கும் அணிகள் அடுத்த இங்கிலிஷ் பிரிமியர் லீக் பருவத்தில் விளையாட தகுதிபெறாது. அதனால் எவர்டன் அணி அதன் ஆட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.

கடந்த பருவத்தை போலவே இந்த பருவத்திலும் சிறப்பாக விளையாடி வரும் நியூகாசல் அணிக்கு இந்த தோல்வி சற்றுபின்னடைவைத் தந்துள்ளது.

இதுவரை 15 ஆட்டங்களில் விளையாடியுள்ள நியூகாசல் 8 ஆட்டங்களில் வெற்றிபெற்றுள்ளது.

தற்போது அந்த அணி புள்ளிப்பட்டியலில் 26 புள்ளிகளுடன் 7ஆவது இடத்தில் உள்ளது. இனிவரும் ஆட்டங்களில் நியூகாசல் சிறப்பாக விளையாடி முதல் ஐந்து இடங்களைக் குறிவைக்கக்கூடும் என்று காற்பந்து கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.

தற்போதைய நிலவரப்பட்டி புள்ளிப்பட்டியலில் ஆர்சனல் குழு 36 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. 34 புள்ளிகளுடன் லிவர்பூல் இரண்டாவது இடத்தில் உள்ளது.

அஸ்டன் வில்லா 32 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. நடப்பு வெற்றியாளரான மான்செஸ்டர் சிட்டி 30 புள்ளிகளுடன் நான்காவது நிலையில் உள்ளது.

குறிப்புச் சொற்கள்