ரியாத்: காற்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது 1,200வது ஆட்டத்தில் விளையாடி வெற்றி பெற்றுள்ளார்.
வெள்ளிக்கிழமை இரவு சவூதி லீக் காற்பந்து போட்டியில் ரொனால்டோவின் அல் நசர் குழுவும் அல் ரியாத் குழுவும் மோதின.
அந்த ஆட்டத்தில் அல் நசர் அணி 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
ரொனால்டோ ஒரு கோல் அடித்தார். மேலும் ஒரு கோல் அடிக்க உதவியாக இருந்தார்.
ஆண்கள் பிரிவில் அதிக காற்பந்து ஆட்டங்கள் விளையாடியவர் பட்டியலில் முதல் இடத்தில் பீட்டர் சில்டனை ரொனால்டோ நெருங்கி வருவதாக சவூதி லீக் அதன் ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டது. சில்டன் 1,387 ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.
38 வயதான ரொனால்டோ இப்பருவத்திற்கான சவூதி லீக்கில் அதிக கோல்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். 16 ஆட்டங்களில் 16 கோல்கள் அடித்துள்ளார் ரொனால்டோ.
“எனது 1,200வது போட்டியில் விளையாட உறுதுணையாக இருந்தவர்கள் அனைவருக்கும் நன்றி,” என்று ரொனால்டோ தமது சமூக ஊடகத்தில் தெரிவித்தார்.
சவூதி லீக் புள்ளிப்பட்டியலில் அல் நசர் அணி 2ஆவது இடத்தில் உள்ளது.