தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

யுனைடெட்டின் விளையாட்டை சாடிய டென் ஹாக்

1 mins read
68457017-c899-438a-8846-0c88d9bee8ab
தொடர்ந்து சீராக விளையாட சிரமப்படும் யுனைடெட் குழுவின் நிர்வாகி டென் ஹாக். - படம்: இபிஏ

மான்செஸ்டர்: இங்கிலி‌ஷ் பிரிமியர் லீக் காற்பந்துக் குழுவான மான்செஸ்டர் யுனைடெட் கணிக்க முடியாத வகையில் விளையாடுவதை சாடியுள்ளார் அதன் நிர்வாகி எரிக் டென் ஹாக்.

சனிக்கிழமையன்று நடைபெற்ற பிரிமியர் லீக் ஆட்டத்தில் யுனைடெட்டை 3-0 எனும் கோல் கணக்கில் வீழ்த்தியது போர்ன்மத். தனது வரலாற்றிலேயே யுனைடெட்டின் சொந்தத் திடலான ஓல்ட் டிராஃபர்டில் இத்தனை கோல் வித்தியாசத்தில் போர்ன்மத் வென்றது இதுவே முதல்முறை.

சென்ற வாரம் செல்சிக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி வென்ற யுனைடெட் இந்த ஆட்டத்தில் பெரிய அளவில் தடுமாறியது. இந்தப் பருவம் இதுவரை யுனைடெட்டின் விளையாட்டு மேலும் கீழுமாக இருந்து வந்துள்ளது.

“ஆம், நிச்சயமாக நான் வருத்தத்துடனும் எரிச்சலுடனும் இருக்கிறேன். நான் எதிர்பார்த்தது வேறு,” என்றார் டென் ஹாக்.

“குழுவின் விளையாட்டைக் கணிக்க முடியாத வண்ணம் இருப்பதுதான் பிரச்சினை. நாம் எப்போதும் ஓர் ஆட்டத்திற்குத் தயாராய் இருக்கவேண்டும். அதற்கு நான் பொறுப்பேற்கவேண்டும்,” என்று டென் ஹாக் குறிப்பிட்டார்.

இந்த லீக் பருவம் பாதிக் கட்டத்தைக்கூட அடையாத நிலையில் யுனைடெட் ஏழு ஆட்டங்களில் தோல்வியடைந்துவிட்டது.

குறிப்புச் சொற்கள்