லிவர்பூல்: இங்கிலிஷ் பிரிமியர் லீக்கில் அண்மைக் காலமாக நன்கு மீண்டுவந்துள்ள எவர்ட்டன் காற்பந்துக் குழுவின் வெற்றிப் பயணம் தொடர்கிறது.
செல்சிக்கு எதிரான ஆட்டத்தில் 2-0 எனும் கோல் கணக்கில் வென்றது எவர்ட்டன்.
ஆட்டத்தின் 54வது நிமிடத்தில் எவர்ட்டனை முன்னுக்கு அனுப்பினார் அப்துலாயே டுக்கூரே. பின்னர் 92வது நிமிடத்தில் லூயிஸ் டோபின் இரண்டாவது கோலைப் போட்டு எவர்ட்டன் வெற்றிபெறுவதை உறுதிப்படுத்தினார்.
லீக்கில் இதுவரை விளையாடிய 16 ஆட்டங்களில் 13 புள்ளிகளைப் பெற்றுள்ளது எவர்ட்டன். நிதி தொடர்பான விதிமுறைகளை மீறியதற்காக அண்மையில் அக்குழுவுக்கு 10 புள்ளிகள் குறைக்கப்பட்டன. அவ்வாறு நிகழாமல் இருந்திருந்தால் லீக் பட்டியலில் எவர்ட்டன், செல்சிக்கு மேல்நிலைக்கு சென்றிருக்கும்.
எல்லா போட்டிகளிலும் ஆடிய கடந்த 13 ஆட்டங்களில ஒன்பதை வென்றுள்ளது எவர்ட்டன். அதேவேளை, சில வாரங்களுக்கு முன்பு மீண்டுவரும் அறிகுறிகளைக் காண்பித்த செல்சி மீண்டும் சிரமங்களை எதிர்நோக்கி வருகிறது.