பெல்கிரேட்: மான்செஸ்டர் சிட்டி காற்பந்துக் குழுவின் பயிற்றுவிப்பாளர் பெப் கார்டியோலா, அந்த அணியின் இளம் வீரர்களைப் பாராட்டியுள்ளார்.
புதன்கிழமை பின்னிரவு நடந்த சாம்பியன்ஸ் லீக் காற்பந்து ஆட்டத்தில் 3-2 என்ற கோல் கணக்கில் செர்பியாவின் சவெர்னா வெஸ்டா குழுவை சிட்டி வீழ்த்தியது.
நடப்பு வெற்றியாளரான சிட்டி அடுத்த சுற்றில் விளையாடும் 16 அணிகளில் ஒன்றாக ஏற்கெனவே தகுதிபெற்றுவிட்ட நிலையில், சவெர்னா வெஸ்டா குழுவுக்கு எதிரான ஆட்டத்தில் அனுபவம் இல்லாத இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்தார் கார்டியோலா.
அணியில் ஒன்பது மாற்றங்கள் செய்த கார்டியோலா, 20 வயது ஆஸ்கர் பாப்க்கும் மிக்கா ஹாமில்டனுக்கும் வாய்ப்பு வழங்கினார்.
கார்டியோலாவின் நம்பிக்கையைப் பூர்த்திசெய்யும் விதமாக, ஆட்டத்தின் 19ஆவது நிமிடத்தில் சிட்டிக்கு முதல் கோல் அடித்தார் ஹாமில்டன்.
62ஆவது நிமிடத்தில் பாப் கோல் அடித்து அணியின் வெற்றியை வீரர்கள் உறுதி செய்தனர். 85ஆவது நிமிடத்தில் கெல்வின் பிலிப்ஸ் பெனால்டி வாய்ப்பு மூலம் சிட்டிக்கு மூன்றாவது கோல் அடித்தார்.
சிட்டிக்கு ஈடுகொடுத்து ஆடிய சவெர்னா வெஸ்டா, 76ஆவது, 91ஆவது நிமிடங்களில் கோல் அடித்தது.
இந்த வெற்றியின் மூலம் பிரிவு ஆட்டங்களில் தான் விளையாடிய ஆறு ஆட்டங்களிலும் சிட்டி வெற்றிபெற்றுள்ளது. சவெர்னா வெஸ்டா அடுத்த சுற்றுக்குத் தகுதிபெறவில்லை.
இந்நிலையில், அனைத்துலகக் காற்பந்துச் சம்மேளனத்தின் சிறந்த பயிற்றுவிப்பாளர்களுக்கான இறுதிப் பட்டியலில் கார்டியோலா இடம்பிடித்துள்ளார். அப்பட்டத்தை அவர் வெல்ல அதிக வாய்ப்புகள் இருப்பதாக காற்பந்து கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.
பிஎஸ்ஜி தகுதி:
பிரெஞ்சு காற்பந்துக் குழுவான பாரிஸ் செயிண்ட் ஜெர்மைன், ஜெர்மனியின் பொருஷியா டோர்ட்மண்ட் குழுவுக்கு எதிரான ஆட்டத்தில் 1-1 என்ற கோல் கணக்கில் சமன் செய்தது.
அதன் மூலம் இரு குழுக்களும் அடுத்த சுற்றுக்குத் தகுதிபெற்றன. அவ்விரு குழுக்கள் இடம்பெற்றுள்ள பிரிவில் நியூகாசல் யுனைடெட்டும் ஏசி மிலானும் உள்ளன. நியூகாசலும் ஏசி மிலானும் அடுத்த சுற்றுக்குத் தகுதிபெறவில்லை.
பார்சிலோனா தோல்வி:
சாம்பியன்ஸ் லீக் போட்டியில் அதிகம் எதிர்பார்க்கப்படும் குழுக்களில் ஒன்றான பார்சிலோனா, பெல்ஜியத்தின் ராயல் ஆண்ட்வெர்ப் குழுக்கு எதிரான ஆட்டத்தில் 2-3 என்ற கோல் கணக்கில் தோற்றது.
பார்சிலோனா ஏற்கெனவே அடுத்த சுற்றுக்குத் தகுதிபெற்றுவிட்டதால் இத்தோல்வி அக்குழுவைப் பாதிக்கவில்லை.
மான்செஸ்டர் யுனைடெட் அடுத்த சுற்றுக்குத் தகுதிபெறவில்லை.
பயர்ன் மியூனிக், கேப்பன்ஹேகன், ஆர்சனல், பிஎஸ்வி எய்தோவன், ரியால் மட்ரிட், நேப்போலி, இண்டர் மிலான், அட்லெட்டிகோ மட்ரிட் ஆகிய குழுக்கள் அடுத்த சுற்றுக்குத் தகுதிபெற்றுள்ளன.