லிவர்பூல்: இங்கிலிஷ் பிரிமியர் லீக்கில் பரம வைரிகளான லிவர்பூலும் மான்செஸ்டர் யுனெடெட்டும் ஞாயிற்றுக்கிழமையன்று சந்திக்கின்றன.
இந்த ஆட்டம் லிவர்பூலின் ஆன்ஃபீல்ட் விளையாட்டரங்கில் நடைபெறும்.
சென்ற லீக் பருவத்தில் இதே ஆட்டத்தில் எதிர்பாரா விதமாக லிவர்பூல் 7-0 எனும் கோல் கணக்கில் யுனைடெட்டை நசுக்கியது. அவ்வாறு மறுபடியும் நிகழ்வதற்கான வாய்ப்புகள் குறைவு என்றார் லிவர்பூல் நிர்வாகி யர்கன் கிளோப்.
“அந்த ஆட்டத்தில் 7-0 எனும் கோல் கணக்கில் லிவர்பூல் வென்றது முற்றிலும் எதிர்பார்ப்புகளுக்கு மாறானது என்பதை நாங்கள் அறிவோம். அது வாழ்நாளில் ஒருமுறை நடக்கும் நிகழ்வு என்று சொல்லலாம். அந்த ஆட்டத்தின் முடிவு 7-0 எனும் கோல் கணக்கில் தோல்வியடைந்த குழுவுக்குதான் உதவக்கூடுமே தவிர அந்த கோல் எண்ணிக்கையில் வென்ற குழுவுக்கு அல்ல,” என்றார் கிளோப்.
“இவ்வாறு இருக்கையில் லிவர்பூல் அதன் பரம வைரியைச் சந்திக்கிறது என்பது மட்டும்தான் குறிப்பிடத்தக்கதாகும்/
“அதுவே இந்த ஆட்டத்தைத் தனிச்சிறப்புமிக்க ஒன்றாக ஆக்கும். அது ஒன்றே போதும். இந்த ஆட்டத்தைத் தனிச் சிறப்புமிக்க ஒன்றாகப் படைக்கும் விதத்தில் லிவர்பூல் விளையாடும் என்பதே எனது நம்பிக்கை. நிலைமையைப் புரிந்துகொண்டு முடிந்தவரை சிறப்பாக விளையாடவேண்டும், அதுதான் எனக்குத் தேவை,” என்று கிளோப் குறிப்பிட்டார்.
இந்த லீக் பருவத்தில் இதுவரை கொடிகட்டிப் பறந்து வந்துள்ள லிவர்பூல் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. யுனைடெட்டோ தவித்துக்கொண்டிருக்கிறது.
அதனால் யுனைடெட் நிர்வாகி எரிக் டென் ஹாக் பணிநீக்கம் செய்யப்படக்கூடும் என்று பேசப்பட்டு வருகிறது. ஆனால் அது தன்னைப் பாதிக்கவில்லை என்றார் டென் ஹாக்.
“கவலை ஏதும் கிடையாது,” என்று டென் ஹாக் கூறினார்.
“வெற்றிபெறவும் குழுவின் விளையாட்டை மேம்படுத்தவும்தான் நான் இருக்கிறேன். சிறப்பாக விளையாடும்போதும் அது போதாமல் போகிறது.
“குழுவின் விளையாட்டு இப்போது மேலும் கீழுமாக உள்ளது. அதனால் அதில் நான் கவனம் செலுத்தவேண்டும். கூடுதல் ஆட்டங்களில் குழு தீவிரமான விளையாட்டில் ஈடுபடப்போகிறது.
“போட்டி தரக்கூடிய குழுவை நாங்கள் களமிறக்குவோம். வெற்றிபெறக்கூடிய குழுவை இறக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது,” என்று விளக்கினார் டென் ஹாக்.
லிவர்பூல் கடைசியாக 2020ஆம் ஆண்டில் லீக் விருதை வென்றது. அப்போதிருந்த அளவுக்கு அக்குழுவின் தற்காப்பு ஆட்டம் இப்போது வலுவாக இல்லை. எனினும், அதன் நட்சத்திர தற்காப்பு வீரர் வெர்ஜில் வேன் டைக் மீண்டும் மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார்.
கோல்களையும் குவித்து வந்துள்ளது லிவர்பூல்.
ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் மற்ற பிரிமியர் லீக் ஆட்டங்களில் ஆர்சனல், பிரைட்டனைச் சந்திக்கிறது, அசத்திவரும் ஆஸ்டன் வில்லா, பிரென்ட்ஃபர்டுடன் மோதுகிறது.
வெஸ்ட் ஹேம் யினைடெட், வுல்வர்ஹேம்ப்டன் வாண்டரர்சைச் சந்திக்கிறது.
(Sources: https://www.straitstimes.com/sport/football/liverpool-will-not-see-repeat-of-freakish-7-0-win-over-man-utd-klopp
https://www.straitstimes.com/sport/old-rivals-liverpool-man-united-in-contrasting-fortunes-ahead-of-anfield-clash
https://www.straitstimes.com/sport/football/ten-hag-says-he-is-not-concerned-about-job-despite-pressure
https://www.espn.com.sg/football/table/_/league/eng.1)