லிவர்பூல்: இங்கிலிஷ் பிரிமியர் லீக்கில் லிவர்பூலும் மான்செஸ்டர் யுனைடெட்டும் மோதிய காற்பந்தாட்டம் கோலின்றி சமநிலையில் முடிந்தது.
ஆட்டம் லிவர்பூலின் சொந்த அரங்கான ஆன்ஃபீல்டில் நடைபெற்றது. இந்த லீக் பருவத்தில் அக்குழு முதன்முறையாக சொந்த மண்ணில் வெல்லத் தவறியது.
இந்த ஆட்டத்தை வென்றிருந்தால் லிவர்பூல் லீக் பட்டியலில் மீண்டும் முதலிடத்துக்குச் சென்றிருக்கும்.
கடந்த வாரம் நடைபெற்ற ஆட்டங்களில் ஏமாற்றம் தந்த யுனைடெட் தன்னம்பிக்கை இழந்த வண்ணம் லிவர்பூலைச் சந்தித்தது. ஆனால் கவனத்துடன் விளையாடி லிவர்பூலை வெல்லவிடாமல் தடுத்தது யுனைடெட்.
சென்ற லீக் பருவத்தில் இதே ஆட்டத்தில் லிவர்பூல் 7-0 எனும் கோல் கணக்கில் மாபெரும் வெற்றிகண்டது. எனினும், அந்த ஆட்டத்தைவிட ஞாயிற்றுக்கிழமை நடந்த இந்த ஆட்டத்தில்தான் லிவர்பூல் கூடுதல் உத்வேகத்துடன் விளையாடியதாகக் கூறினார் அக்குழுவின் நிர்வாகி யர்கன் கிளோப்.
இந்த ஆட்டத்தில் 69 விழுக்காட்டு நேரம் பந்தை வைத்திருந்த லிவர்பூல் 34 முறை கோல் போட முயற்சி செய்தது. சென்ற பருவம் நடைபெற்ற ஆட்டத்திலோ 60 விழுக்காட்டு நேரத்துக்குப் பந்தை வைத்திருந்தது லிவர்பூல்; ஆனால் கிடைத்த 16 கோல் போடும் வாய்ப்புகளில் 7ஐப் பயன்படுத்திக்கொண்டது.
அந்த ஆட்டத்தில் லிவர்பூலுக்கு ஈடுகொடுக்க முயன்ற யுனைடெட் இம்முறை தற்காப்பு ஆட்டத்தை வலுப்படுத்திக்கொண்டு கவனமாக ஆடியது.
இதற்கிடையே, ஆன்ஃபீல்டுக்கு வந்துகொண்டிருந்த யுனைடெட் விளையாட்டாளர்கள் இருந்த பேருந்துமீது போத்தல் எறியப்பட்டது. அச்செயலுக்கு எதிராக லிவர்பூல் கண்டனம் தெரிவித்தது.