ஜெடா: லீக் காற்பந்துக் குழுக்களுக்கான உலகக் கிண்ணப் போட்டியின் இறுதியாட்டத்திற்கு முன்னேறியது இங்கிலிஷ் பிரிமியர் லீக் குழுவான மான்செஸ்டர் சிட்டி.
அரையிறுதியாட்டத்தில் ஜப்பானின் உராவா ரெட் டைமன்சை 3-0 எனும் கோல் கணக்கில் சிட்டி வென்றது.
முற்பாதியாட்டம் முடியும் நிலையில் இருந்தபோது மாரியஸ் ஹொய்பிராட்டன் பந்தை சொந்த வலைக்குள் அனுப்பியதால் சிட்டி முன்னுக்குச் சென்றது. அதற்குப் பிறகு 52வது நிமிடத்தில் மட்டேயோ கொவாச்சிச், 59வது நிமிடத்தில் பெர்னார்டோ சில்வா எஞ்சிய இரண்டு கோல்களைப் போட்டனர்.
முன்னதாக திங்கட்கிழமையன்று நடைபெற்ற மற்றோர் அரையிறுதியாட்டத்தில் பிரேசிலின் ஃபுலுமினேசி, சவூதி அரேபியாவின் அல் அஹ்லியை 2-0 எனும் கோல் கணக்கில் வென்றது. அதனையடுத்து இவ்வாண்டின் குழு உலகக் கிண்ணப் போட்டியின் இறுதியாட்டத்தில் சிட்டியும் ஃபுலுமினேசியும் மோதும்.
இங்கிலிஷ் பிரிமியர் லிக்கில் கடந்த சில வாரங்களாக சிரமப்பட்டு வரும் சிட்டிக்கு மீண்டுவர குழுக்களுக்கான உலகக் கிண்ணப் போட்டி நல்ல வாய்ப்பை வழங்குவதாகக் கூறினார் அதன் நட்சத்திர நடுத்திடல் வீரர் ரொட்ரி. கடின உழைப்புடன் நிலைமையை மாற்றும் மனவுறுதியுடன் சிட்டி வீரர்கள் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
(Sources: https://www.espn.com.sg/football/match?gameId=687850
https://www.straitstimes.com/sport/football/club-world-cup-has-given-man-city-chance-to-reset-says-rodri)