ஜெடா: லீக் காற்பந்துக் குழுக்களுக்கான உலகக் கிண்ணப் போட்டியின் இறுதியாட்டத்தில் இங்கிலிஷ் பிரிமியர் லீக் குழுவான மான்செஸ்டர் சிட்டி வாகை சூடியது.
பிரேசிலைச் சேர்ந்த ஃபுலுமினென்சே குழுவை சிட்டி 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
இந்த வெற்றியின் மூலம் 2023ஆம் ஆண்டில் மட்டும் இங்கிலிஷ் பிரிமியர் லீக் கிண்ணம், சாம்பியன்ஸ் லீக் கிண்ணம் என ஐந்து கிண்ணங்களை வென்று சாதித்துள்ளது மான்செஸ்டர் சிட்டி.
ஆட்டத்தின் முதல் நிமிடத்திலேயே கோல் அடித்து அசத்தினார் ஜூலியன் அல்வரெஸ்.
சிட்டியின் வேகத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் திணறிய ஃபுலுமினென்சே அணி, 27வது நிமிடத்தில் சிட்டிக்கு மேலும் ஒரு கோலை வழங்கியது.
ஆட்டத்தின் இரண்டாவது பாதியிலும் ஆதிக்கம் செலுத்திய சிட்டி 72, 88 நிமிடங்களில் கோல் அடித்து வெற்றியை தன் வசப்படுத்தியது.
கடந்த சில வாரங்களாக இங்கிலிஷ் பிரிமியர் லீக் ஆட்டங்களில் புள்ளிகளைக் குவிக்க தடுமாறி வரும் சிட்டிக்கு இந்த வெற்றி பெரிய ஊக்கத்தை தரலாம் என்று கூறப்படுகிறது.