லண்டன்: இந்தப் பருவம் இங்கிலிஷ் பிரிமியர் லீக் விருதை வெல்ல ஆர்சனல் காற்பந்துக் குழு தற்காப்பு, தாக்குதல் ஆட்டம் இரண்டிலும் மேம்படவேண்டும் என்று எச்சரித்துள்ளார் அதன் நிர்வாகி மிக்கெல் அர்டடெட்டா.
சென்ற வாரம் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் வெஸ்ட் ஹேம் யுனைடெட்டிடம் 2-0 எனும் கோல் கணக்கில் ஆர்சனல் தோல்வியடைந்தது. அந்த ஆட்டத்தில் வென்றிருந்தால் ஆர்சனல் லீக் பட்டியலில் முதலிடம் வகித்திருக்கும்.
வெஸ்ட் ஹேமுக்கு எதிரான ஆட்டத்தில் ஆர்சனல் 70 விழுக்காட்டுக்கும் மேலான நேரத்துக்குப் பந்தைத் தன்வசம் வைத்திருந்தது. அக்குழு 30 கோல் வாய்ப்புகளையும் உருவாக்கியது.
மேலும், எதிர்க் குழுவின் பெனால்டி பாக்ஸ் பகுதியில் 77 முறை பந்துடன் இருந்தது ஆர்சனல். கடந்த 14 ஆண்டுகளில் பிரிமியர் லீக் ஆட்டம் ஒன்றில் எந்தக் குழுவும் கோல் போடாமலிருந்து இத்தனை முறை எதிர்க் குழுவின் பெனால்டி பாக்சில் பந்தைத் தொட்டதில்லை.
இதர ஆட்டங்களிலும் இப்படி கோல் வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தாதிருந்தால் ஆர்சனல் பிரிமியர் லீக் விருதை வெல்ல வாய்ப்பில்லை என்றார் அர்ட்டெட்டா. ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெறவுள்ள ஃபுல்ஹமுக்கு எதிரான லீக் ஆட்டத்தை முன்னிட்டு அவர் பேசினார்.
“தற்காப்பு, தாக்குதல் ஆட்டம் இரண்டிலும் எங்களின் விளையாட்டு மேம்படாவிட்டால் வாய்ப்பில்லை. இறுதியில் அதுதான் ஆக முக்கிய அம்சமாகும்,” என்று அர்ட்டெட்டா சுட்டினார்.
அதேவேளை, எதிர்க் குழுவின் பெனால்டி பாக்ஸ் பகுதியில் ஆர்சனல் 77 முறை பந்தைத் தொட்டது நம்பிக்கையூட்டும் ஒன்று என்றும் அவர் குறிப்பிட்டார்.
“பயம் இல்லை. கூடுதலாக முயற்சி செய்து, மேம்பட்டு ஆட்டங்களில் வெற்றிபெறுவதில் கவனம் செலுத்தவேண்டும்,” என்றும் அவர் விவரித்தார்.
கடந்த நான்கு லீக் ஆட்டங்களில் மூன்றில் வெற்றிபெறத் தவறியது ஆர்சனல். இரண்டில் தோல்வியடைந்தது, ஓர் ஆட்டம் சமநிலையில் முடிந்தது.
புத்தாண்டை முன்னிட்டு தங்களின் விளையாட்டு மேம்படும் என்ற நம்பிக்கையை ஆர்சனல் கொண்டுள்ளது. ஃபுல்ஹமுக்கு எதிரான ஆட்டம் அதற்கு நல்ல வாய்ப்பளிக்கக்கூடும் என கூறப்படுகிறது.
ஆட்டம் ஃபுல்ஹமின் கிரேவன் காட்டேஜ் விளையாட்டரங்கில் நடைபெறும். இதற்கு முன்பு இந்த அரங்கில் விளையாடிய ஐந்து ஆட்டங்களில் வெற்றிபெற்றது ஆர்சனல். மேலும், அவற்றில் நான்கு ஆட்டங்களில் குறைந்தது மூன்று கோல்களைப் போட்டது.