லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லிக் குழுவான டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் ஜனவரி மாதத்தில் அதிக விளையாட்டாளர்களையோ குறிப்பிடத்தக்க விளையாட்டாளர்களையோ வாங்க அதிக வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளார் அதன் நிர்வாகி ஆஞ்சி பொஸ்டெக்கொக்லு.
லீக்கில் ஞாயிற்றுக்கிழமையன்று ஸ்பர்ஸ், போர்ன்மத்தைச் சந்திக்கவுள்ளது. அந்த ஆட்டத்தை முன்னிட்டு பொஸ்டெக்கொக்லு இவ்வாறு சொன்னார்.
அதிக வேகத்துடன் விளையாடுவதால் ஸ்பர்சின் பல விளையாட்டாளர்கள் காயமுற்றிருக்கின்றனர். அதனால் நிலைமையைச் சமாளிக்க இக்குழுவுக்குக் கூடுதல் விளையாட்டாளர்கள் தேவைப்படும் என்று கூறப்பட்டது.
எனினும், ஜனவரியில் குழுவில் அதிக மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கவேண்டாம் என்று பொஸ்டெக்கொக்லு குறிப்பிட்டுள்ளார். பல முக்கிய ஐரோப்பிய காற்பந்து லீக்குகளின் நடுப்பகுதியான ஜனவரியில் குழுக்கள் விளையாட்டாளர்களை வாங்கி விற்க அனுமதி உண்டு.
புதிய நிர்வாகி பொஸ்டெக்கொக்லுவின் தலைமையில் இந்த லீக் பருவத்தை அபாரமாகத் தொடங்கியது ஸ்பர்ஸ். முதல் 10 ஆட்டங்கள் எதிலும் தோல்வியடையாதிருந்து லீக் பட்டியலில் முதலிடத்துக்குச் சென்றது.
ஆனால், அதற்குப் பிறகு ஸ்பர்ஸ் சற்று தடுமாறி ஐந்து ஆட்டங்களில் தோல்வியடைந்தது. பின்னர் ஓரளவு மீண்டு வந்தபோதும் சென்ற வாரம் பிரைட்டனுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 4-2 எனும் கோல் கணக்கில் தோல்வியடைந்தது ஸ்பர்ஸ்.
கடந்த ஏழு லீக் ஆட்டங்களில் ஆறில் வென்றுள்ளது போர்ன்மத். திடீரென அபாரமாக விளையாடத் தொடங்கிய அது, லீக் பட்டியலின் கடைசி சில இடங்களிலிருந்து அதிக இடங்கள் தாவி முன்னேறியது.
இதற்கிடையே, போர்ன்மத்தின் ஹாமெத் ட்ராவோரே, மலேரியா நோய்த் தொற்றுக்கு ஆளாகியிருப்பதாக அக்குழுவின் நிர்வாகி அண்டோனி இரயோலா தெரிவித்துள்ளார்.
ஐவரி கோஸ்ட்டைச் சேர்ந்த நடுத்திடல் வீரரான ட்ராவோரே, அந்நாடு ஏற்று நடத்தும் ஆப்பிரிக்க தேசிய அணிகளுக்கான போட்டியில் (ஆப்பிரிக்கன் கப் ஆஃப் நேஷன்ஸ்) பங்கேற்கவிருந்தார். தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் 23 வயது ட்ராவோரே, மீண்டும் விளையாட சில காலம் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

