லண்டன்: ஆர்சனல் காற்பந்துக் குழு, தனது ஆட்டங்களில் பின்பற்றும் மனப்போக்கை மாற்றிக்கொள்ளவேண்டும் என்று அதன் நட்சத்திர விளையாட்டாளர் டெக்லன் ரைஸ் அறிவுரை வழங்கியுள்ளார்.
ஆர்சனல் அடுத்தடுத்த இரண்டு இங்கிலிஷ் பிரிமியர் லீக் ஆட்டங்களில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து ரைஸ் அவ்வாறு கூறினார். ஞாயிற்றுக்கிழமையன்று ஃபுல்ஹமிடம் 2-1 எனும் கோல் கணக்கில் தோல்வியடைந்தது ஆர்சனல். அதனால் லீக் விருதை வெல்வதற்கான போட்டியில் ஆர்சனலுக்குப் பின்னடைவு ஏற்பட்டது.
“இலக்கை அடைவதற்கான உந்துதல் கூடுதலாக இருக்கவேண்டும். மனப்போக்கு மேம்படவேண்டும். ஒவ்வொருவரும் மேலும் சிறப்பாக விளையாடுவதை உறுதிசெய்யவேண்டும்,” என்றார் ரைஸ்.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மற்றொரு பிரிமியர் லீக் ஆட்டத்தில் போர்ன்மத்தை 3-1 எனும் கோல் கணக்கில் வென்றது டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர். கடந்த ஏழு லீக் ஆட்டங்களில் ஆறில் வென்று அனைத்திலும் தோல்வியடையாதிருந்த போர்ன்மத் இந்த ஆட்டத்தில் தடுமாறியது.