ஐசிசி சிறந்த வீரர் விருதுக்கான பட்டியலில் கோஹ்லி, ஜடேஜா

2 mins read
c187af75-73c8-46be-9878-63422b028ea3
இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரவீந்திர ஜடேஜா (இடது), விராத் கோஹ்லி. - படம்: ஏஎஃப்பி

துபாய்: கடந்த 2023ஆம் ஆண்டிற்கான அனைத்துலக கிரிக்கெட் மன்றத்தின் (ஐசிசி) சிறந்த கிரிக்கெட் வீரர் விருதுக்கான நால்வர் பட்டியலில் இந்திய வீரர்கள் விராத் கோஹ்லியும் ரவீந்திர ஜடேஜாவும் இடம்பெற்றுள்ளனர்.

அண்மையில் ஒருநாள் போட்டிகளுக்கான உலகக் கிண்ணத்தை வென்ற ஆஸ்திரேலிய அணியின் தலைவர் பேட் கம்மின்சும் இறுதிப் போட்டியில் சதம் விளாசிய டிராவிஸ் ஹெட்டும் மற்ற இருவர்.

ஏற்கெனவே இருமுறை சிறந்த வீரருக்கான சர் கேர்ஃபீல்ட் சோபர்ஸ் விருதை வென்றுள்ளார் கோஹ்லி.

சென்ற ஆண்டு ஒருநாள் போட்டிகளில் 50வது சதமடித்து, ஆக அதிக சதமடித்தவர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை (49 சதங்கள்) விஞ்சினார் கோஹ்லி.

அத்துடன், ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டிகளிலும் 765 ஓட்டங்களைக் குவித்து, தொடர் நாயகனாகவும் அவர் தேர்வுபெற்றார். ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டிகளைப் பொறுத்தவரை, ஒரே தொடரில் இதற்குமுன் இவ்வளவு ஓட்டங்களை எவரும் எடுத்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்தத்தில், 2023ஆம் ஆண்டில் மட்டும் கோஹ்லி அனைத்துலகப் போட்டிகளில் 2,048 ஓட்டங்களைக் குவித்தார்.

ஜடேஜா சென்ற ஆண்டில் மட்டும் அனைத்துலகப் போட்டிகளில் 66 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். அத்துடன், 613 ஓட்டங்களையும் எடுத்துள்ளார்.

இவர்களுடன், மேலும் ஐந்து இந்திய வீரர்கள் சிறந்த வீரருக்கான விருதுகளை எதிர்நோக்குகின்றனர்.

டெஸ்ட் போட்டிகளில் சிறந்த வீரர் விருதுக்கான பட்டியலில் அஸ்வினின் பெயர் உள்ளது. அதுபோல், ஒருநாள் போட்டிகளில் சிறந்த வீரர் விருதுக்கான பட்டியலில் கோஹ்லி, முகம்மது ஷமி, ஷுப்மன் கில் என மூவரும் டி20 போட்டிகளில் சிறந்த வீரர் விருதுக்கான பட்டியலில் சூர்யகுமார் யாதவும் இடம்பெற்றுள்ளனர்.

வளர்ந்து வரும் வீரர் விருதுக்கான பட்டியலில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இடம்பெற்றுள்ளார்.

குறிப்புச் சொற்கள்