தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தவிக்கும் ஆர்சனலுடன் மோதும் லிவர்பூல்

2 mins read
1f47e39c-b579-40ba-bfd4-1b21888e5c72
அபாரமாக விளையாடிவரும் லிவர்பூல். - படம்: ஏஎஃப்பி
multi-img1 of 2

லண்டன்: கூடுதலான ஆட்டங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தாலும் தனது குழுவான லிவர்பூல் எஃப்ஏ கிண்ணக் காற்பந்துப் போட்டியை அலட்சியப்படுத்தாது என்று கூறியுள்ளார் அதன் நிர்வாகி யர்கன் கிளோப்.

எஃப்ஏ கிண்ணம் உட்பட நான்கு கிண்ணங்களை வெல்லும் முயற்சியில் ஈடுபடுவதைப் பெரும் மகிழ்ச்சியுடன் பார்ப்பதாகவும் கிளோப் கூறினார்.

இப்பருவத்தில் லீக் கிண்ணப் போட்டியின் அரையிறுதியாட்டத்துக்கு முன்னேறியுள்ள லிவர்பூல், யூரோப்பா லீக் போட்டியின் காலிறுதிக்கு முந்திய சுற்றுக்கும் தகுதிபெற்றுவிட்டது.

“ஒரு பருவத்தில் மூன்று போட்டிகளின் இறுதியாட்டத்துக்கு முன்னேறியதுடன் லீக் விருதை வெல்லும் போட்டியிலும் தீவிரமாக இறங்கினோம். அது மிகவும் சவாலாக இருந்தது என்றாலும் உண்மையைச் சொன்னால் அது எங்களுக்கு விறுவிறுப்பாகவும் அமைந்தது,” என்றார் கிளோப். 2021-22 இங்கிலாந்து காற்பந்துப் பருவத்தில் லிவர்பூலின் தேர்ச்சியைப் பற்றி அவர் பேசினார்.

“வெம்பிளி அரங்கில் விளையாடுவது ஒரு மாபெரும் அனுபவமாகும். வேறு எதுவும் அதற்கு ஈடாகாது.

“அதேவேளை அடுத்த பருவத்தில் எத்தகைய தாக்கம் ஏற்படும் என்பதைப் பற்றி சிந்திக்கக்கூடாது. அடுத்த ஆண்டு பிரச்சினைகள் எழக்கூடிய சாத்தியம் இருப்பதற்காக ஒரு போட்டியிலிருந்து வெளியேறக்கூடாது. பிரச்சினைகளை அந்தந்த வேளையில்தான் சரிசெய்யவேண்டும்,” என்று குறிப்பிட்டார் கிளோப்.

இங்கிலி‌ஷ் பிரிமியர் லீக் பட்டியலில் முதலிடத்தில் உள்ள லிவர்பூல், ஞாயிற்றுக்கிழமையன்று எஃப்ஏ கிண்ணப் போட்டியின் மூன்றாம் சுற்று ஆட்டத்தில் ஆர்சனலைச் சந்திக்கவுள்ளது. 14 முறை எஃப்ஏ கிண்ணத்தை வென்றிருக்கும் ஆர்சனல், இப்போட்டியில் ஆக அதிக முறை வாகை சூடிய குழுவாகும்.

லிவர்பூலும் எஃப்ஏ கிண்ண வரலாற்றில் ஆகச் சிறப்பாக விளையாடிய குழுக்களில் ஒன்றாகும். இவ்விரு குழுக்களும் மொத்தமாக 22 முறை எஃப்ஏ கிண்ணத்தை வென்றிருக்கின்றன.

எனினும், பிரிமியர் லீக் பட்டியலில் நான்காம் இடத்தில் உள்ள ஆர்சனல், கடந்த சில வாரங்களாகக் களையிழந்து காணப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்