லண்டன்: தனது முக்கிய விளையாட்டாளர்கள் இல்லாத நிலையில் மாற்று ஆட்டக்காரர்கள் சிறப்பாக விளையாடி எஃப்ஏ கிண்ணக் காற்பந்துப் போட்டியில் ஆர்சனலை 2-0 எனும் கோல் கணக்கில் தனது லிவர்பூல் குழு வென்றதைப் பாராட்டியுள்ளார் அக்குழுவின் நிர்வாகி யர்கன் கிளோப்.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற எஃப்ஏ கிண்ண மூன்றாம் சுற்று ஆட்டத்தில் லிவர்பூலின் முகம்மது சாலா, வட்டாரு என்டோ, வெர்ஜில் வேன் டைக், டொமினிக் சொபொஸ்லாய் உள்ளிட்டோர் விளையாடவில்லை.
“நீங்கள் கவனித்திருப்பீர்கள், முற்பாதியாட்டத்தில் குழு அவ்வளவு சீராக இல்லை. அதிகம் விளையாடாத வீரர்கள் ஒன்றாகக் களமிறங்கியது அதற்குக் காரணம் கிடையாது. முற்பாதியாட்டத்தில் நேரம் சரியில்லை. அது பிரச்சினையாக அமைந்தது.
“இது மனிதர்களுக்கு இயல்பான ஒன்று என ஆட்டம் தொடங்குவதற்கு முன்பு நான் எனது விளையாட்டாளர்களிடம் கூறினேன். இது சவாலான ஆட்டம். எந்தக் குழுவும் ஆர்சனலின் அரங்கிற்குச் சென்று எளிதில் வென்றுவிடாது,” என்று விளக்கினார் கிளோப்.
ஆட்டத்தின் 80வது நிமிடத்தில் ஆர்சனலின் ஜேக்கப் கிவியோர் பந்தை சொந்த வலைக்குள் அனுப்பினார். 95வது நிமிடத்தில் லிவர்பூலின் இரண்டாவது கோலைப் போட்டார் லூயிஸ் டியாஸ்.
“குறிப்பாக பிற்பாதியாட்டத்தில் எனது வீரர்கள் அற்புதமாக விளையாடினர். முற்பாதியாட்டத்தில் களையிழந்து காணப்பட்டபோதும் தொடர்ந்து விட்டுக்கொடுக்காமல் விளையாடினர். இது தனிச்சிறப்பு வாய்ந்த ஒன்று. அதிலும் எதிர்க்குழுவின் திடலில் இவ்வாறு செய்வது மிகவும் சிறப்பானது,” என்று கிளோப் பெருமைப்பட்டார்.