புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் ரோகித் சர்மாவும் நட்சத்திரம் விராத் கோஹ்லியும் கிட்டத்தட்ட ஓராண்டு இடைவெளிக்குப் பிறகு டி20 கிரிக்கெட் அணியில் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தானும் இந்தியாவும் போட்டியிடவிருக்கும் தொடரில் அவர்கள் களமிறங்கவுள்ளனர்.
2022ஆம் ஆண்டு நடைபெற்ற சென்ற டி20 உலகக் கிண்ணப் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதியாட்டத்தில்தான் இருவரும் கடைசியாக விளையாடினர். இதர வகை கிரிக்கெட் போட்டிகளில் இருவரும் தொடர்ந்து விளையாடி வந்தாலும் இவ்வாண்டின் டி20 உலகக் கிண்ணப் போட்டியில் அவர்கள் பங்கேற்பது கேள்விக்குறியாக இருந்து வந்தது.
ரோகித் இல்லாத வேளையில் ஹர்த்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ் இருவரும் வெவ்வேறு காலகட்டங்களில் இந்தியாவின் டி20 அணித் தலைவர்களாகப் பொறுப்பு வகித்தனர். காயமுற்றதால் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரில் அவர்கள் பங்கேற்கமாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேஎல் ராகுலும் அணியில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை. ஆனால் அதற்கான காரணத்தை இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவிக்கவில்லை.