தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

எஃப்ஏ கிண்ண நான்காம் சுற்றில் யுனைடெட்

1 mins read
db6a727c-e51e-4a47-9bf7-bac1bde577e3
விகனுக்கு எதிரான ஆட்டத்தில் பெனால்டி வாய்ப்பை கோலாக்கும் யுனைடெட்டின் புருனோ ஃபெர்னான்டஸ் (இடது). - படம்: ராய்ட்டர்ஸ்

லண்டன்: இங்கிலாந்தின் எஃப்ஏ கிண்ணக் காற்பந்துப் போட்டியின் மூன்றாம் சுற்று ஆட்டத்தில் விகன் ஆத்லெட்டிக்கை 2-0 எனும் கோல் கணக்கில் வென்றது இங்கிலி‌ஷ் பிரிமியர் லீக் குழுவான மான்செஸ்டர் யுனைடெட்.

ஆட்டத்தின் 22வது நிமிடத்தில் யுனைடெட்டை முன்னுக்கு அனுப்பினார் டியோகோ டாலோ. பின்னர் 74வது நிமிடத்தில் யுனைடெட்டுக்குக் கிடைத்த பெனால்டி வாய்ப்பை புருனோ ஃபெர்னான்டஸ் கோலாக்கினார்.

ஐரோப்பிய போட்டிகள், கரபாவ் கிண்ணப் போட்டி ஆகியவற்றிலிருந்து வெளியேற்றப்பட்டு பிரிமியர் லீக் பட்டியலில் எட்டாம் இடத்தில் தவித்துக்கொண்டிருக்கிறது யுனைடெட். அப்படியிருக்கையில் இப்பருவத்தில் அக்குழுவுக்கு எஃப்ஏ கிண்ணத்தை மட்டுமே வெல்வதற்கான வாய்ப்பு உள்ளது.

அந்த வகையில் விகனுக்கு எதிரான வெற்றி யுனைடெட்டுக்கு முக்கியமாக அமைந்துள்ளது.

“வெற்றிபெறுவது மட்டுமே எஃப்ஏ கிண்ணப் போட்டியில் ஆக முக்கியமானது. போட்டியின் ஒவ்வோர் ஆட்டத்திலும் குழுக்கள் வெளியேற்றப்படும். அதனால் வேலையைக் கச்சிதமாக முடிக்கவேண்டும். அதைத்தான் நான் விளையாட்டாளர்கள் அறையில் எனது வீரர்களிடம் சொன்னேன், வேலையை முடித்துவிட்டோம் என்று,” எனக் கூறினார் யுனைடெட் நிர்வாகி எரிக் டென் ஹாக்.

நான்காம் சுற்றில் நியுபோர்ட் கவுண்டி அல்லது ஈஸ்ட்லெய் எஃப்சியை, யுனைடெட் சந்திக்கும்.

குறிப்புச் சொற்கள்