அர்ஜென்டினா பயிற்றுவிப்பாளராகத் தொடரும் ஸ்கலோனி

1 mins read
a7dc0d27-63c1-40f9-90f1-f85e1fe52fdb
அர்ஜென்டினா பயிற்றுவிப்பாளர் லயனல் ஸ்கலோனி. - கோப்புப் படம்: ஏஎஃப்பி

புவெனஸ் அய்ரஸ்: இவ்வாண்டின் லத்தீன் அமெரிக்க தேசிய அணிகளுக்கான கோப்பா அமெரிக்கா காற்பந்துப் போட்டி நிறைவடையும் வரையிலாவது லயனல் ஸ்கலோனி, அர்ஜென்டினாவின் பயிற்றுவிப்பாளராகத் தொடர்வார் என்று திங்கட்கிழமையன்று (ஜனவரி 15) உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.

இவ்வாண்டின் கோப்பா அமெரிக்கா போட்டி ஜூன் மாதம் 20ஆம் தேதி முதல் ஜூலை மாதம் 14ஆம் தேதிவரை அமெரிக்காவில் நடைபெறும். இப்போட்டியில் ஓரிரு மத்திய அமெரிக்க, வட அமெரிக்க அணிகளும் இடம்பெறுவது வழக்கம்.

கோப்பா அமெரிக்கா போட்டிக்கு முன்பு அர்ஜென்டினா, சீனாவில் சில நட்புமுறை ஆட்டங்களில் விளையாடும். அவை குறித்துப் பேச அர்ஜென்டினா காற்பந்துச் சங்கத் தலைவர் கிளாவ்டியோ டாப்பியா ஸ்கலோனியைச் சந்தித்தார்.

அதனைத் தொடர்ந்து ஸ்கலோனி, அர்ஜென்டினா பயிற்றுவிப்பாளராகத் தொடர்ந்து பொறுப்பு வகிப்பார் என்று தெரிவிக்கப்பட்டது. வரும் நாள்களில் இது அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்படும் என்று டாப்பியா சமூக ஊடகத்தில் குறிப்பிட்டார்.

2018ஆம் ஆண்டில் அர்ஜென்டினா பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்றார் 45 வயது ஸ்கலோனி. அவருக்குக்கீழ் 2021ல் அர்ஜென்டினா கோப்பா அமெரிக்கா கிண்ணத்தை வென்றது.

அதற்குப் பிறகு 2022ல் உலகக் கிண்ணத்தையும் வென்றது அர்ஜென்டினா.

குறிப்புச் சொற்கள்