தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்தியாவின் முதல்நிலை சதுரங்க வீரரானார் பிரக்ஞானந்தா

2 mins read
1b32ccbe-d252-478a-910c-02aec8fc8d74
நெதர்லாந்தில் நடைபெற்று வரும் டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் சதுரங்கப் போட்டியில் நடப்பு உலக வெற்றியாளரான சீனாவின் டிங் லிரனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா.  - படம்: இந்திய ஊடகம்

தி ஹேக்: இந்தியாவின் முதல் நிலை சதுரங்க வீரராக உயர்ந்துள்ளார் 18 வயது பிரக்ஞானந்தா.

நெதர்லாந்தில் நடந்து வரும் டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் தொடரின் நான்காவது சுற்றில் நடப்பு உலக வெற்றியாளரான சீனாவின் டிங் லிரனை, பிரக்ஞானந்தா வீழ்த்தினார்.

இந்த வெற்றியின் மூலம் இந்திய சதுரங்க வீரர்கள் தரவரிசையில் விஸ்வநாதன் ஆனந்தைப் பின்னுக்குத் தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளார் பிரக்ஞானந்தா.

‘லைவ் ரேட்டிங்’ புள்ளிப் பட்டியலில் பிரக்ஞானந்தா 2748.3 புள்ளிகளும் விஸ்வநாதன் ஆனந்த் 2748 புள்ளிகளும்பெற்றுள்ளனர்.

ஆனந்த் பல ஆண்டுகளாக இந்திய சதுரங்க வீரர்கள் தரவரிசையில் முதலிடத்தில் இருந்து வருகிறார். அவருக்கு அடுத்ததாக நாடு முழுவதும் பல வீரர்கள் சதுரங்கத்தில் வென்றாலும், எவராலும் அவரை நெருங்க முடியவில்லை. கடந்த ஆண்டு 17 வயதான சதுரங்க வீரர் குகேஷ் முதலிடத்திற்கு வந்தாலும் நீடிக்கவில்லை.

உலகம் முழுவதும் கவனிக்கப்படும் வீரராக உருவெடுத்துள்ள தமிழகத்தைச் சேர்ந்த பிரக்ஞானந்தா, கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்றதோடு, பல சாதனைகளையும் நிகழ்த்தியுள்ளார். 2023ஆம் ஆண்டில் உலகக் கிண்ண இறுதிப் போட்டியை எட்டிய உலகின் இளைய சதுரங்க வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

அத்துடன், ஆனந்துக்குப் பிறகு உலகக் கிண்ண இறுதிப் போட்டியை எட்டிய இரண்டாவது இந்தியர் என்ற சாதனையையும் அவர் படைத்தார். மேலும், சீனாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும் அவர் வென்றார்.

இதனிடையே, இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரமான சச்சின் டெண்டுல்கர், இந்தியாவின் முதல்நிலை சதுரங்க வீரராக முன்னேறியுள்ள பிரக்ஞானந்தாவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“உலக வெற்றியாளரை வீழ்த்திச் சாதித்ததற்கு வாழ்த்துகள். 18 வயதிலேயே சதுரங்க விளையாட்டில் ஆதிக்கம் செலுத்துவதோடு இந்தியாவின் முதல்நிலை வீரராகவும் உயர்ந்துள்ளீர்கள். எதிர்காலப் போட்டிகளில் வெல்ல வாழ்த்துகள். சதுரங்கத்தில் அனைத்துலக அளவில் இந்தியாவிற்குத் தொடர்ந்து பெருமை சேருங்கள்,” என்று சச்சின் தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்