லண்டன்: இங்கிலாந்தின் எஃப்ஏ கிண்ணக் காற்பந்துப் போட்டியில் நான்காம் சுற்றுக்கு முன்னேறியுள்ளது எவர்ட்டன்.
போட்டியின் மூன்றாம் சுற்றில் கிரிஸ்டல் பேலசை 1-0 எனும் கோல் கணக்கில் எவர்ட்டன் வென்றது. பேலஸ், எவர்ட்டன் இரண்டும் இங்கிலிஷ் பிரிமியர் லீக்கில் போட்டியிடும் குழுக்கள்.
இச்சுற்றில் இந்த இரு குழுக்களும் முதலில் மோதிய ஆட்டம் சமநிலையில் முடிந்தது. அதனால் வெற்றியாளரை நிர்ணயிக்க ஆட்டம் மீண்டும் நடத்தப்பட்டது.
இரண்டாம் ஆட்டத்தின் 42வது நிமிடத்தில் எவர்ட்டனின் ஆண்ட்ரே கோமெஸ் வெற்றி கோலைப் போட்டார்.
இதேபோல் மீண்டும் நடத்தப்பட்ட மற்றொரு மூன்றாம் சுற்று ஆட்டத்தில் பிளாக்பூலை 3-2 எனும் கோல் கணக்கில் வென்று நான்காம் சுற்றுக்கு முன்னேறியது நாட்டிங்ஹம் ஃபாரஸ்ட்.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் ஆண்ட்ரு ஒமொபாமிடெலெ, டேனிலோ இருவரும் கோல் போட்டு ஃபாரஸ்ட்டை 2-0 எனும் கோல் கணக்கில் முன்னுக்கு அனுப்பினர். 78வது நிமிடத்துக்குள் பிளாக்பூல் இரண்டு கோல்களைப் போட்டு கோல் எண்ணிக்கையைச் சமப்படுத்தியது.
ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில் கிறிஸ் உட், ஃபாரஸ்ட்டின் வெற்றி கோலைப் போட்டார்.