வுல்வர்ஹேம்ப்டன்: பிரென்ட்ஃபர்டுக்கும் வுல்வர்ஹேம்ப்டன் வாண்டரர்சுக்கும் இடையிலான எஃப்ஏ கிண்ணக் காற்பந்தாட்டத்தில் ஒரு ரசிகரிடம் துணை நடுவர் பொறுப்பு வழங்கப்பட்டது.
இவ்விரு இங்கிலிஷ் பிரிமியர் லீக் குழுக்களும் எஃப்ஏ கிண்ணப் போட்டியின் மூன்றாம் சுற்றில் மோதின. முதல் ஆட்டம் சமநிலையில் முடிந்ததால் வெற்றியாளரை நிர்ணயிக்க புதன்கிழமை அதிகாலை ஆட்டம் மீண்டும் நடத்தப்பட்டது.
அதில் 3-2 எனும் கோல் கணக்கில் வென்று நான்காம் சுற்றுக்கு முன்னேறியது வுல்ஸ்.
அந்த ஆட்டம் கூடுதல் நேரம் வரை சென்றபோது துணை நடுவர் ஒருவருக்கு உடல்நலப் பிரச்சினை ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து ராஸ் பெனெட் எனும் வுல்ஸ் ரசிகர் அப்பணியைச் செய்ய முன்வந்தார்.
துணை நடுவராகப் பணியாற்ற விருப்பமா என்று நடுவர் தன்னிடம் கேட்டதாக அவர் தெரிவித்தார். சட்டென்று தேவையான உத்திகள் கற்றுத் தரப்பட்டால் தான் களமிறங்கத் தயார் என்று பெனெட் கூறியிருக்கிறார்.
இளையர்களுக்கான காற்பந்துப் போட்டிகளில் நடுவராகப் பணியாற்றிவந்த தனக்கு எஃப்ஏ கிண்ணப் போட்டியில் துணை நடுவராக இருக்கும் வாய்ப்பு கிடைத்தது ஓர் இன்ப அதிர்ச்சி என்றார் பெனெட்.