கோவை: கோவையில் நடைபெற்ற ரஞ்சி கிண்ண கிரிக்கெட் தொடரில் தமிழ்நாடு - ரயில்வேஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில், தமிழ்நாடு அணி இன்னிங்ஸ் மற்றும் 129 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் ரஞ்சி கிண்ண கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. அதன்படி, சி பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழ்நாடு - ரயில்வேஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி கோவை ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி மைதானத்தில் ஜனவரி 19ஆம் தேதி தொடங்கியது.
தமிழ்நாடு அணி முதலில் பந்தடித்து, முதல் இன்னிங்சில் 489 ஓட்டங்கள் குவித்தது. அதிகபட்சமாக ஜெகதீசன் 402 பந்துகளில் 245 ஓட்டங்கள் குவித்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.
பின்னர், முதல் இன்னிங்சைத் தொடங்கிய ரயில்வேஸ் அணி 246 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பிரதாம் சிங் 92 ஓட்டங்கள் எடுத்தார்.
அதைத் தொடர்ந்து, ‘ஃபாலோ ஆன்’ பெற்ற ரயில்வேஸ் அணி, இரண்டாவது இன்னிங்சிலும் மோசமாகப் பந்தடித்தது. அந்த அணி தனது 2வது இன்னிங்சில் 114 ஓட்டங்களுக்குச் சுருண்டது. இதன்மூலம் தமிழ்நாடு அணி இன்னிங்ஸ் மற்றும் 129 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக ஜெகதீசன் தேர்வு செய்யப்பட்டார்.