தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மலேசியாவுடன் போராடி காலிறுதிக்கு முந்திய சுற்றுக்கு முன்னேறிய தென்கொரியா

1 mins read
eff5f985-9b1e-4c2f-a615-b92020d1bc64
மலேசியாவின் டேனியல் டிங்கைக் கடந்து பந்தைக் கொண்டு செல்கிறார் தென்கொரிய அணியின் தலைவர் சொன் ஹியோங் மின் (இடது). - படம்: ஏஎஃப்பி

டோஹா: சொன் ஹியோங் மின்னின் தலைமையிலான தென்கொரிய அணி, ஆசிய கிண்ண காற்பந்துப் போட்டியின் காலிறுதிக்கு முந்திய சுற்றுக்கு முன்னேறியது. ஆனால் அது எளிதாக தென்கொரியாவுக்குக் கிடைக்கவில்லை.

ஜனவரி 25ஆம் தேதி நடைபெற்ற ‘இ’ பிரிவு ஆட்டத்தில் தென்கொரியா கடுமையாகப் போராடி, கடைசி வரை விட்டுக்கொடுக்காமல் அபாரமாக விளையாடிய மலேசியாவுடன் 3-3 என்ற கோல் கணக்கில் சமநிலை கண்டது.

இந்த முடிவுக்குப் பிறகு, தென்கொரியா ‘இ’ பிரிவில் இரண்டாம் நிலையைப் பிடித்து, காலிறுதிப் போட்டியில் பலம் வாய்ந்த ஜப்பானைச் சந்திப்பதிலிருந்து தப்பித்தது.

காலிறுதிப் போட்டியில் தென்கொரியா ‘எஃப்’ பிரிவில் முதல் இடத்தைப் பிடித்த சவூதி அரேபியாவைச் சந்திக்கும். சவூதி, தாய்லாந்துடன் 0-0 என்று சமநிலை கண்டது. ‘எஃப்’ பிரிவில் இரண்டாம் இடம் பெற்ற தாய்லாந்து காலிறுதியில் உஸ்பெகிஸ்தானைச் சந்திக்கும்.

ஆட்டத்தின் 104வது நிமிடம் வரைக்கும் 3-2 என்ற கோல் கணக்கில் முன்னணியில் இருந்து வெற்றிக் கனியைச் சுவைக்கும் தருவாயில் இருந்த தென்கொரியாவை அதிர்ச்சிக்குள்ளாக்கியது 105வது நிமிடத்தில் மலேசியாவின் ரோமெல் மோராலெஸ் போட்ட கோல்.

“நாங்கள் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஆனால், மலேசிய அணியினரின் மிகச் சிறந்த ஆட்டமும் கடுமையாக அவர்கள் போராடிய விதமும் எங்கள் பணியைச் சற்று சிரமமாக்கியது,” என்று பாராட்டினார் தென்கொரிய அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் ஜுகன் கிளின்ஸ்மன்.

குறிப்புச் சொற்கள்