சான் பெட்ரோ, ஐவரி கோஸ்ட்: ஜனவரி 28ஆம் தேதி நடைபெற்ற காலிறுதிக்கு முந்திய போட்டியில் இயல்பான ஆட்டத்தின் முடிவிலும் கூடுதல் நேரத்தின் முடிவிலும் எகிப்தும் காங்கோவும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்ததால் வெற்றியாளரை நிர்ணயிக்க பெனால்டி வாய்ப்புகள் வழங்கப்பட்டன.
அதில் கடைசி பெனால்டி வாய்ப்பை எடுத்த எகிப்திய கோல் காப்பாளர் முகம்மது அபு கபாய், அதை கோலாக்கத் தவறியதால், 8-7 என்ற கோல் கணக்கில் காங்கோ வெற்றி பெற்று, ஆப்பிரிக்க நாடுகள் காற்பந்துக் கிண்ண காலிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.
ஆப்பிரிக்க நாடுகள் காற்பந்துக் கிண்ணத்தை ஏழு முறை வென்றிருக்கும் எகிப்து போட்டியிலிருந்து வெளியேறும் வேளையில், அதை வெற்றி கண்ட காங்கோ, பிப்ரவரி 3ஆம் தேதி நடைபெறும் காலிறுதிப் போட்டியில் கினியுடன் பொருதும் என்று ராய்ட்டர்ஸ் செய்தி தெரிவித்தது.
இதற்கிடையே, ஜனவரி 29ஆம் தேதி நடைபெற்ற மற்றொரு காலிறுதிக்கு முந்திய ஆட்டத்தில் கினி, இக்குவடோரியல் கினியை 1-0 என்ற கோல் கணக்கில் வென்று காலிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.